பேரணியின் கோரிக்கை ஐ.நா பாதுகாப்பு சபையில் முரண்பாட்டை தோற்றுவிக்கட்டும்! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற 'பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டிவரை' எழுச்சிப் பேரணியின் கோரிக்கை, ஐ.நா பாதுகாப்புச் சபையில் நாடுகளிடையே முரண்பாட்டைத் தோற்றிவிக்கட்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழர் தேசத்தின் பேரெழுச்சியாக அமைந்த 'பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி வரை'எழுச்சிப் பேரணி, இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு உரமூட்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டிருந்த ஆங்கிலச் செய்தியறிக்கையில்,
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் முயற்சி நடந்தால் ஐநா பாதுகாப்புப் பேரவையில் அதனைச் சீனா (வீட்டோ) தடுப்பதிகாரத்தால் அதனைத் தடுத்து விடும் என்பதால் இத்தகைய முயற்சியால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்று சில வட்டாரங்களில் கருத்துகள் பேசப்படக் கேட்கிறோம்.
முதலாவதாக, தார்ஃபூர் தொடர்பாக சூடான் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்ட போது, சீனாவுக்கு சூடானுடன் நல்ல வணிக உறவு இருந்த போதிலும் அது இம்முடிவை எதிர்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சீனா தனது வீட்டோ தடுப்பதிகாரம் கொண்டு தடுத்தால் தடுக்கட்டும் எனத் தெரிவித்துள்ளதோடு, ஐ.நா பாதுகாப்புச் சபையில் இலங்கை தொடர்பில் கருத்து மோதல் வரட்டும் என இடித்துரைத்துள்ளது.
சென்ற வாரம் மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பாகப் பாதுகாப்புப் பேரவையிலிருந்து ஒருமித்த அறிக்கை வர விடாமல் சீனம் மறித்து விட்டது.
இதன்பொருள் மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு பன்னாட்டு அக்கறைக்குரியதாக இல்லாமற்போய் விட்டது என்பதன்று.
இந்த அக்கறையைச் சீனாவால் வழிமறிக்க முடியவில்லை. மேலும், மியான்மர் போன்ற நாடுகளில் சனநாயகம் மீள வேண்டும் என்ற அறைகூவலுக்குச் சீனத்தின் செயல் உரமூட்டியுள்ளது.
இதே போல், இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் முயற்சியைச் சீனா வழிமறிக்குமானால் இருதரப்பாகவோ, பலதரப்பாகவோ நடவடிக்கைகள் எடுக்க மற்ற நாடுகளின் முயற்சிகளுக்கு அது ஊக்கமாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழர் தேசம் சமீபத்தில் காணாத பெருந்திரள் மக்கள் எழுச்சியாக அமைந்திருந்த இப்பேரணியின் முதன்மைக் கோரிக்கைகளில் ஒன்றாக இது அமைந்திருந்ததோடு, முஸ்லிம் சமூகத்தினர், சிவில் அமைப்பினர் ஆகியோரது பங்களிப்பும் இந்த எழுச்சிக்கு வலுவூட்டியிருந்தது.
ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் மிசேல் பசலே அம்மையார் அவர்கள்,வெளியிட்டிருந்த அறிக்கையில்,
இலங்கை நிலைமையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் படி ஐ.நா மனிதவுரிமைப் பேரவை உறுப்பு நாடுகளை அவர் வலியுறுத்தியிருந்தார்.
தமிழத் தாயகக் கட்சிகள், சமய அமைப்புகள், சிவில் சமூகம், குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் ஆகியவையும் கூட ஜனவரி 15ஆம் நாள் ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு எழுதிய கூட்டு மடலில், இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு கோரியிருந்தன.
2015ம் ஆண்டு, உலகமெங்கும் இருந்து 15 இலட்சத்துக்கு மேற்பட்டோர்(இலங்கையில் 70 ஆயிரம் பேர்) 'இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புக!' என்னும் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டிருந்தன.
இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு, பன்னாட்டுச் சட்டவாளர் ஆணையமும் 2019ம் ஆண்டு கோரியிருந்தது.
கடந்த காலத்திய இலங்கை ஜனாதிபதி ஆணையங்கள் உள்ளிட்ட, உள்நாட்டுப்பொறி முறைகள் முழுத் தோல்வியை தளுவியுள்ளமையினை ஆவணப்படுத்தியுள்ளது என ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பில் நடத்திய புலனாய்வு(ழுஐளுடு) பொறுப்புக் கூறலுக்கான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
'குறிப்பாகப் பன்னாட்டுக் குற்றங்களுக்கு' உள்நாட்டுக் குற்றவியல் நீதிப்பொறி முறையில் நீதியைத் தடுக்க ஆழ வேரூன்றிய தடைக்கற்கள் இருப்பதை ஆய்வுசெய்துள்ளது.
ஐ.நா ஆணையாளரது 2020ம் ஆண்டு பிப்ரவரி அறிக்கையில் 'இன்னுமொரு விசாரணை ஆணையத்தை நியமிப்பது பொறுப்புக் கூறலை முன்னெடுக்கும் என்று நான் நம்பவில்லை'எனத் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.