பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ள விடயம்
இந்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வு இன்றைய தினம் (16.12.2023) இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இலங்கை மக்களை நசுக்கும் வற் வரி : ஆடம்பர கேளிக்கை விடுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள்
இறையாண்மை கொண்ட நாடு
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. நாங்கள் 1948 முதல் இறையாண்மை கொண்ட நாடாக செயற்பட்டு வருகிறோம். அந்த இறையாண்மை கொண்ட நாட்டின் அதிகாரம் மக்களுக்குரியது.
அரசாங்கங்கள் மக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மேலும் இந்த நாடு இலங்கை தனித்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இலங்கையர்கள்.
இலங்கையர்களாகிய நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எமது தேசியத்தை பாதுகாப்பதுடன் இலங்கையர் என்ற நாட்டின் தனித்துவத்தையும் பாதுகாக்க வேண்டும். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது என்ன நடக்கும் என்பதை கடந்த காலங்களில் நாம் அனுபவித்தோம். அப்போது நாட்டின் இறையாண்மை மட்டுப்படுத்தப்படும். நாட்டு மக்களை சமமாக நடத்தும் வகையில் சமூக முன்னேற்றமும் ஏற்பட வேண்டும்.
பொருளாதார முன்னேற்றமும் சமூக முன்னேற்றமும்
பொருளாதார முன்னேற்றமும் சமூக முன்னேற்றமும் இதன்போது மிக முக்கியம். இந்த கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் இந்த கட்டமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பு ஜனாதிபதி முதல் கீழ்நோக்கிச் செல்கிறது.
நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளது. அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது. அதே சமயம் அதிகாரம் சார் மக்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அத்துடன் இலங்கையின் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த தனித்துவத்தை பாதிக்கும் வகையில் எவரேனும் செயற்பட முற்பட்டால் அல்லது இன மற்றும் மத அடிப்படையில் தனித்தனியாக செயல்பட முயற்சித்தால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு கேடு விளைவிக்கும் செயற்பாடாகும்.
இலங்கை இராணுவம் ஒரு புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆசியாவில் நவீன இராணுவங்கள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், இலங்கை நான்காவது இடத்தில் இருந்தது. 1881 இல், இலங்கை காலாட்படை ஆரம்பிக்கப்பட்டபோது, நாங்கள் அந்த நிலையை அடைந்தோம்.
பொறுப்பு புறக்கணிப்பு
மேலும், வரலாற்றில் இடம்பெற்ற ஒவ்வொரு பாரிய போர்களிலும் நமது பாதுகாப்புப் படைகள் பங்கேற்றுள்ளன. இந்த பெருமைமிக்க இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாப்பது உங்களின் பொறுப்பாகும். நீங்கள் தலைமை தாங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.
அச்சமின்றி அந்தத் தலைமையை உங்களுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் வழங்குங்கள். உங்கள் பொறுப்புகளை புறக்கணிக்காதீர்கள்.
குறிப்பாக கடினமான காலங்களில்தான், தலைமைத்துவம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அந்தக் கடமையை நினைவில் வைத்து நாட்டுக்கான பொறுப்பை நிறைவேற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |