நாட்டை முடக்குவது குறித்து ஜனாதிபதி நிமிடங்களில் தீர்மானம் எடுக்க முடியும்!
நாட்டை முடக்குவது குறித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நிமிடங்களில் தீர்மானம் எடுக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டைக்கு இன்றைய தினம் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
சில தரப்பினர் மிகவும் குறைவாக சிந்தித்து நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். ஜனாதிபதியினால் இந்த தீர்மானத்தை ஒரு நாளில் சில நிமிடங்களில் எடுக்க முடியும்.
எனினும் கொவிட் தொற்றாத பெரும் எண்ணிக்கையிலான மக்களை எவ்வாறு வாழ வைப்பது என்பது குறித்து அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
நாட்டை முடக்கி, துறைமுகங்களின் பணிகளை இடைநிறுத்தினால் நாட்டில் பொருட்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்படும்.
நாடு முழுவதிலும் உள்ள சில்லறைக் கடைகளை மூடினாலும் பரவாயில்லை. ஏனெனில் நாடு முழுவதிலும் சதொச நிறுங்களின் ஊடாக பொருட்களை விற்பனை செய்ய முடியும். சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு.
பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் பெரிய தொகை கொடுத்து மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய நேரிடும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களது வீடுகளுக்கே நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகளை விநியோகம் செய்ய விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.