மரணங்கள் குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் பிரேதப் பரிசோதனையாளர்களுக்கு
தனிமைப்படுத்தப்படாத குடும்பம் ஒன்றில் எவரேனும் இறந்து போனால், அவரது சடலத்தை பீ.சி.ஆர் பரிசோதனையின்றி அல்லது பிரேதப் பரிசோதனையின்றி உறவினர்களிடம் கையளிக்கும் அதிகாரத்தை நீதியமைச்சு பிரேதப் பரிசோதனையாளர்களுக்கு வழங்கியுள்ளது என களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் தமர களுபோவில தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் இது குறித்து நீதியமைச்சு அறிவித்த பின்னர், இது சம்பந்தமாக பிரேதப் பரிசோதனையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒருவர் வீட்டில் அல்லது வைத்தியசாலையில் உயிரிழந்தால், சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நடத்தப்படுவதற்கு முன்னர் பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த சடலம் பிணவறைகளில் வைக்கப்படுவதால், பிணவறைகளில் ஏற்படும் இடப்பற்றாக்குறையை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவரேனும் ஒருவர் சந்தேகத்திற்குரிய விதத்தில் உயிரிழந்திருந்தால் அல்லது தற்கொலை செய்துக்கொண்டிருந்தால், வழமைப் போல் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானம் காரணமாக வைத்தியசாலைகளில் உள்ள பிணவறைகளில் சடலங்களை வைத்திருப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




