ராஜபக்ஷர்களின் சதுரங்க விளையாட்டு ! செக் மேட்டில் சிக்கப் போவது யார்?
கடந்த சில தினங்களாக நாட்டின் அரசியல் களம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கின்றது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற பிரவேசம் அதன் பின்னரான அரசியல் நகர்வுகள் என அனைத்தும் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன.
கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக அமைச்சர் உதய கம்மன்பில சர்ச்சையில் சிக்கினார்.
அவர் பதவி விலக வேண்டும் என கோரி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் பகிரங்கமாக அறிவித்ததில் அரசுக்குள்ளே நடக்கும் பனிப்போர் வெட்டவெளிச்சமானது.
அதையும் தாண்டி அரசின் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, தயாசிறி போன்றவர்கள் பல விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தனர்.
அனைத்தையும் விட கடந்த காலங்களில் ராஜபக்சவினரை ஆட்சிக்கு கொண்டு வர அரும்பாடு பட்ட முக்கியஸ்தர்களுள் ஒருவரான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினராக மீள் பிரவேசம் எடுத்த ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் ஆசிர் வழங்கியமை சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியது.
அதன் தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துக்களும் அரசு மீதான அவரது நம்பிக்கை அவரது ஆதரவு பிறிதொரு பக்கம் சாய்ந்து விட்டதா என கேள்வி எழுப்புகின்றன.
அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் வெவ்வேறு திசைகளில் செல்வதாகவும் இதற்கிடையில் அவர்கள் மஹிந்தவை ஓரங்கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஊடகம் ஒன்றுக்கு பகிரங்கமாக அறிவித்ததுடன் இந்த நிலை இப்படியே செல்லுமாயின் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கவும் தயங்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரமும் அதள பாதாளத்தில் விழுந்து அதனை கட்டியெழுப்ப மீட்பர் ஒருவர் வர மாட்டாரா என அனைவரும் சிந்திக்க தொடங்கும்போது பசில் ராஜபக்ச தனது மீள் பிரவேசத்தை ஆரம்பிக்கிறார்.
இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதி அமைச்சராகவும் பசில் ராஜபக்ச பதவியேற்றதோடு அவருக்கு கீழ் பல நிறுவனங்களும் பொறுப்புக்களும் கையளிக்கப்பட்டன.
இதுவரை காலமும் நிதி அமைச்சராக இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இருந்து நிதி அமைச்சும் அதன் கீழான பொறுப்புக்களும் பசிலிடம் வழங்கப்படுகின்றது.
அமைச்சரானதும் தனது முதலாவது ஊடக சந்திப்பில் கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என கூறி தனது முதலாவது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார் பசில்.
அதன் பின்னர் மாலையில் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனும், இராஜாங்க அமைச்சருமான சஷீந்திர ராஜபக்சவிற்கு ஒரு இராஜாங்க அமைச்சுப் பதவியும் பொறுப்புக்களும் வழங்கப்படுகின்றன.
இவை அனைத்தும் செவ்வனே நடைபெற இன்னுமொரு பக்கம் இதுவரை நாட்களும் பிரதமர் அலுவலகத்திற்கு செல்லாத அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்றைய தினம் முழுதும் பிரதமர் அலுவலகத்திலேயே இருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பசிலின் மீள் பிரவேசமும் நிதி அமைச்சராக பொறுப்பேற்றதையும் சமல் ராஜபக்ச மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார் எனினும் ராஜபக்ச சகோதரர்களிடையே இது பிளவை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவை அனைத்தும் கடந்து செல்ல இன்று காலையில் இருந்து சமூக வலைத்தளங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவும் திடீரென தனியே சந்தித்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் நீண்ட நேரம் உரையாடியதாகவும் தெரியவருகின்றது.
அரசியல் தாண்டி மஹிந்த மற்றும் ரணில் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள் என்ற போதிலும், ரணிலின் மீள் பிரவேசத்துக்கு மஹிந்த ராஜபக்சவே காரணம் என அரசியல் ஆர்வலர்கள் ஒரு புறம் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இப்படியான சூழ்நிலையிலேயே ராஜபக்சவினரின் அரசியல் நகர்வுகள் பலரிடத்திலும் கேள்வியையும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்புவதாய் அமைகின்றன.
ஏதோ ஒரு வகையில் கோட்டாபய அரசாங்கத்தில் மஹிந்த ஓரங்கட்டப்படுவாராயின் நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது என்ற கேள்வியும் எழுகின்றது.
இதுவரை காலமும் ராஜபக்சர்களின் தீவிர விசுவாசியாகவிருந்தவர்கள் தற்போதைய கோட்டாபய அரசுடன் முரண்படுவதும், ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிபீடமேற்ற அரும்பாடுபட்டவர்கள் தற்போது எதிராக நிற்பதும் இந்த அரசின் வீழ்ச்சிப் போக்கை எடுத்துக்காட்டுகின்றது.
இந்த சூழலில் பசிலின் மீள் வருகை அரசின் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்குமா இல்லை ராஜபக்ச அரசின் அஸ்தமனத்திற்கு வழிவகுக்குமா என கேள்வி எழுகிறது.
இவ்வாறான சதுரங்க விளையாட்டுகள் ராஜபக்ஷ குடும்பத்திற்குள் ஏற்படுத்தப் போகும் விளைவுகள் அடுத்து வரும் சில காலங்களில் வெளிப்படும் என்பது திண்மம்.













