திடீரென மைதானத்தில் மயங்கி வீழ்ந்த வீரர்! யூரோ கிண்ண கால்பந்தாட்ட போட்டி நிறுத்தம்
ஐரோப்பா கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில், டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி வீழ்ந்த நிலையில் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய அணிகள் இன்று மோதின. கோபன்ஹேகனில் நடந்த இந்த போட்டியின் போது கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார்.
அவர் அசைவற்று கிடந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. உடனடியாக செயற்பட்ட வைத்தியர்கள் அவரை சிகிச்சை அளித்தனர். பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஐரோப்பா கிண்ண கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த நாடுகளின் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன.
இதன்படி, இன்றைய போட்டியில் டென்மார்க்-பின்லாந்து அணிகள் விளையாடின. முதல் பாதி ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் இருந்தபோது கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார்.
எவ்வாறாயினும் அவர் தற்போது கண் விழித்திருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போட்டியை மீண்டும் தொங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய நேரம் 07.30 மணியளவில் போட்டி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளின் வீரர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து போட்டியை மீண்டும் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.