திட்டங்கள் மிக தெளிவாக இருக்கின்றது! - பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவிப்பு
பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதற்கான திட்டங்கள் மிக தெளிவாக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
எனினும், குளிர்காலத்தில் இந்த நிலையில் மாற்றங்கள் வரக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் 2019ம் ஆண்டு இறுதிப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட கோவிட் பெரும் தொற்று தற்போது உலகின் அனைத்து நாடுகளில் பரவியுள்ளது.
கோவிட் தொற்றினால் உலகம் முழுதும், 179,419,204 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,885,375 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில், பிரித்தானியாவில் அமுலில் இருந்த கோவிட் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்ப்பட்டு வந்தது. இறுதியாக இன்றைய தினம் (ஜூன் 21ம் திகதி) கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடு ஏற்படுத்திய அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை ஜூலை 19ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை 19ம் திகதி கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையான தளர்த்துவதற்கான திட்டங்கள் மிக தெளிவாக இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு அடையாளம் காணப்பட்ட கோவிட் வகைகளுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டது என்று போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் கடந்த சில வாரங்களாக கோவிட் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்திய மாறுபாடான டெல்டா வகை கோவிட் பரவலால் பிரித்தானியாவில் வேகமாக பரவி வருகின்றது.
இதன்படி, பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,633 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 46,40,507 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பு காரணமாக மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 981 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட் பாதிப்பில் இருந்து இதுவரை 43 லட்சத்து 03 ஆயிரத்து 996 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது நோய் பாதிப்புடன் 2,08,530 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.