மே ஒன்பதுக்குள் போரை முடிக்க திட்டம்! - ரஷ்யாவிற்கு கொண்டுசெல்லப்படும் உக்ரைன் மக்கள்
உக்ரைன் ரஷ்யா இடையேயா போர் இரண்டாவது மாதமாக நீடித்துள்ள நிலையில், போரை மே மாதம் ஒன்பதாம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்களை உக்ரைன் ஆயுத படைகளின் பொதுப் பணியாளர்களின் உளவுத் துறை வெளியிட்டுள்ளது. “மே ஒன்பதாம் திகதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ரஷ்ய துருப்புகளிடம் கூறப்பட்டுள்ளது” என உக்ரைன் ஆயுத படைகளின் பொதுப் பணியாளர்களின் உளவுத் துறை கூறியுள்ளது.
மே மாதம் ஒன்பதாம் திகதி ரஷ்யாவில் ஜேர்மனியின் நாஜி படையை வென்ற நாளாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே உக்ரைன் மக்கள் வலுக்கட்டாயமாக ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
“ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் வலுக்கட்டாயமாக ரஷ்யாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பணயக் கைதிகளாக பயன்படுத்தப்படலாம்.
இதன் மூலம் சரண் அடையுமாறு உக்ரைன் மீது அழுத்தம் கொடுக்கலாம். 84 ஆயிரம் குழந்தைகள் உள்பட 4 லட்சம் பேர் தங்கள் விருப்பத்திற்கு மாறாக ரஷ்யாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ரஷ்ய படைகள் தங்களது தாக்குதலை இடைவிடாமல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீது மூன்று முனைகளில் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துகின்றன.
உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.
எனினும், கீவ், கார்கிவ் உள்ளிட்ட பெரிய நகரங்களை ரஷ்யா இன்னும் கைப்பற்றவில்லை. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.