இந்திய சிறுமியின் உயிரை பறித்த தொலைபேசி: பெற்றோருக்கு அறிவுறுத்தல்!
வீடியோ கேம் விளையாடும்போது தொலைபேசி வெடித்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் கேரளா மாநிலத்தில் திருச்சூர் பகுதியில் நேற்றைய தினம் (24.04.2023) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருச்சூர் மாவட்டம் திருவில்வமலையைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் ஆதித்யஸ்ரீ (வயது 8) அப்பகுதயிலுள்ள பாடசாலை ஒன்றில் மூன்றாம் வகுப்பில் கல்விகற்று வருகிறார்.
தொலைபேசி வெடிப்பு
சம்பவ தினமான நேற்றைய தினம் (24.04.2023) இரவு ஆதித்யஸ்ரீ, தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்துள்ளதாகவும் இதன்போது எதிர்பாராதவிதமாக தொலைபேசி வெடித்துச் சிதறியுள்ளதாவும் கூறப்படுகின்றது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோசமான மின்கலம் (Battery) காரணமாக தொலைபேசி வெடித்து சிதறியதாக கூறியுள்ள கேரளா பொலிஸார், இது தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதர தீமைகள்
சிறுமி மரணம் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளதாவது, பொதுவாகச் சிறுவர்கள் அதிக நேரம் தொலைபேசி பயன்படுத்துவதால் அதிக பாதிப்பு ஏற்படுகின்றது.
அத்துடன், தொலைபேசி பாவனையினால் இதர தீமைகளுடன், உயிரைப் பறிக்கும் அளவிலான விபரீதம் ஏற்படுகின்றமை இந்த கேரள சம்பவத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.
தமது பிள்ளைகள் தொலைபேசி பயன்படுத்தும் நேரத்தை பெற்றோர் கூடுமானவரை குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.