கொரோனா இல்லை என்று வீட்டுக்கு சென்ற நபர் மரணம்! இரண்டாவது பரிசோதனையில் தொற்று உறுதி
கடும் இருமல் மற்றும் காய்ச்சலுடன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்றவில்லை என கூறி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் இரவே அவர் உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த பின்னர் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றாளி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காலி யக்கலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் 5 பிள்ளைகளின் தந்தை எனவும் காலி நகர திடீர் மரண விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.
கடும் இருமல் மற்றும் காய்ச்சல் தொடர்ந்தும் காணப்பட்டதன் காரணமாக அவர் கடந்த 6 ஆம் திகதி சிகிச்சை பெற கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
அங்கு நடத்தப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் பின் அவர் கொரோனா தொற்றாளி இல்லை எனக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அவர் வெளி நோயாளர் பிரிவில் மருந்துகளை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டில் தனியறையில் தங்கிருந்த அவருக்கு அன்றைய தினம் இரவு நோய் நிலைமை அதிகரித்துள்ளது.
மீண்டும் அவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் இறந்த நபர் கொரோனா தொற்றாளி என தெரியவந்துள்ளது.




