திடீரென பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த அரசியல்வாதி!
ஹுங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் திடீரென பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.
போயா தினத்தன்று மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பிரேமதிலக்க அமரவீர (62) ஹுங்கம இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஹுங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறை கூடத்தில் வைக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
அதையடுத்து, சுயநினைவின்றி இருந்த சந்தேகநபர், ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,சந்தேகநபரின் மரணத்தையடுத்து அவரது உறவினர்கள் கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியை ரன்ன பிரதேசத்தில் மறித்து போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், ஹுங்கம பொலிஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவான காணொளியை, பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த CCTV காணொளியில் பதிவாகியுள்ள காட்சிகளின் பிரகாரம், சந்தேகநபர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.