பருத்தித்துறையில் நீதிமன்ற தடையுத்தரவுக்கு மத்தியிலும் தொடரும் போராட்டம் (PHOTOS)
நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் குறித்த தடை உத்தரவு கட்டளை பருத்தித்துறை பொலிஸாரினால் போராட்டம் இடம்பெறும் இடத்தில் வாசிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீனவர்களால் அகற்றப்பட்டுள்ள போதும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் கலக தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியனும் சென்று ஆதரவினை வழங்கியுள்ளனர்.
அத்தோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்டவர்களும் சென்று மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வருகின்ற இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே மேற்குறிப்பிட்ட அரசியல் பிரதிநிதிகளும் தமது ஆதரவை
வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











