கோட்டாபய செய்த மிகப் பெரிய தவறு! பட்டியலிடும் சரத் வீரசேகர
கடந்த காலங்களில் கோவிட் வைரஸ் தொற்றை முற்றாக இல்லாதொழிப்பது உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றது. அது தொடர்பில் மக்களுக்கு அன்றைய அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லையாயினும் மக்கள் அதனை உணர வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி நிலைமையை மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை இதுவே மிகப் பெரிய தவறு.
அதனைச் செய்யாமையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விட்ட தவறு. கோட்டாபய ராஜபக்சவும் தற்போது அதனை உணர்ந்திருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு இனம், மதம், கட்சி பேதங்களை மறந்து ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
புதிய ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை விளக்க உரை காலத்திற்கு மிகவும் பொருத்தமானது. நாடு தற்போது எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு இனம், மதம், கட்சி, பிரதேசம் என அனைத்து பேதங்களையும் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.
நாடு இதற்கு முன்னர் இதுபோன்றதொரு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கவில்லை என்பதை நாமறிவோம். இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு நாட்டின் அனைத்து மக்களும் அனைத்து தரப்பினரும் பங்களிப்புச் செய்ய வேண்டியது அவசியம்.
அத்துடன் அமைதியான போராட்டங்கள் தவிர்ந்த நாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடருமானால் ஒரு போதும் எம்மால் வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியாமற் போகும். அவ்வாறு வெளிநாட்டு செலாவணியை தேட முடியாது போனால் எரிபொருள், சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலையே ஏற்படும்.
அதனால் கடந்தவற்றை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் செயற்பட வேண்டிய காலம் இது. தமது கொள்கை விளக்க உரையிலும் ஜனாதிபதி அதனையே வலியுறுத்தி இருந்தார். அத்துடன் கடந்த காலங்களில் விட்ட தவறுகள் காரணமாகவே நாடு தற்போது இத்தகைய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதனைக் கருத்திற்கொண்டு நாட்டை பொருளாதாரத்தில் கட்டியெழுப்புவதற்கான தலைமைத்துவத்தை புதிய ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ள நிலையில் நாம் அவருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.
யுத்தத்தை வென்ற எம்மால் பொருளாதார நெருக்கடியையும் வென்றிருக்க முடியும்..
கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி நிலைமையை மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை. கோவிட் வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை மூலமாக எமக்கு கிடைக்க வேண்டிய ஐந்து பில்லியன் டொலர்கள் இல்லாமல் போனது.
அதேபோன்று வேறு வழிகளில் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ஏழு பில்லியன் டொலர்களும் இல்லாமல் போனது. அந்த அரசாங்க காலத்திலும் எந்த தடையும் இன்றி அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டே வந்துள்ளன.
கோவிட் தடுப்பூசி மற்றும் மருந்துகள் உட்பட நாட்டிலிருந்து கோவிட் வைரஸ் தொற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்கான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றது.
அது தொடர்பில் மக்களுக்கு அன்றைய அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லையாயினும் மக்கள் அதனை உணர வேண்டும். அதனைச் செய்யாமையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விட்ட தவறு. அவரும் தற்போது அதனை உணர்ந்திருப்பார்.
யுத்தத்தை வென்ற எம்மால் பொருளாதார நெருக்கடியையும் வெல்ல முடியும். அதற்கு மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயற்பட்டிருக்க வேண்டும். என்றாலும் அதனை நாங்கள் செய்யவில்லை. நாடு பெரும் போராட்டத்திற்கு முகம் கொடுத்தது.
எவ்வாறெனினும் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்காகவா போராட்டம் இடம்பெற்றது என எனக்கு தெரியாது. என்றாலும் இறுதி பெறுபேறு அவ்வாறுதான் ஏற்பட்டது. அந்த பெறுபேற்றுக்கமைய நாங்கள் செயற்டுவோம் என குறிப்பிட்டார்.