இன்று வானில் அரிய நிகழ்வு - மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே..!
வானில் இன்று (31) அரிய விண்வெளி நிகழ்வான ‘புளூ மூன்’ (Blue Moon) தோன்றவுள்ளது.
ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி நிலவுகள் தோன்றும் அரிதான சந்தர்ப்பத்தில், இரண்டாவது பௌர்ணமி நிலவே ‘புளூ மூன்’ என அழைக்கப்படுகிறது.
புளூ மூன்
சந்திரன் பூமியை ஒரு முறை முழுமையாகச் சுற்றிவர சுமார் 29.5 நாட்கள் எடுப்பதால், 30 அல்லது 31 நாட்கள் கொண்ட சில மாதங்களில் இரண்டு முழுநிலவுகள் தோன்றும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த ஆண்டு மே மாதத்தின் முதல் பௌர்ணமி 1ஆம் திகதி நிகழ்ந்ததால், இன்று இரண்டாவது பௌர்ணமி தோன்றுகிறது. ‘புளூ மூன்’ என்ற பெயர் இருந்தாலும், நிலவு நீல நிறத்தில் தோன்றாது என்று வானியலாளர்கள் விளக்குகின்றனர்.
இது வெறும் காலக்கணக்கை அடிப்படையாகக் கொண்ட பெயராகும். இன்று தோன்றும் நிலவும் வழக்கம்போல வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்திலேயே பிரகாசமாகக் காணப்படும்.
வானில் அதிசயம்
மேலும், இந்த புளூ மூன் நிகழ்வு ‘மைக்ரோமூன்’ (Micromoon) நிகழ்வாகவும் அமைகிறது.
அதாவது, சந்திரன் தனது நீள்வட்டப் பாதையில் பூமியிலிருந்து மிகவும் தொலைவில் உள்ள ‘அபோஜி’ (Apogee) நிலைக்கு அருகில் இருக்கும் நேரத்தில் முழுநிலவாகத் தோன்றுகிறது.

இதனால், இந்த நிலவு சாதாரண முழுநிலவை விட சுமார் 6 முதல் 7 சதவீதம் வரை சிறியதாகவும், குறைவான பிரகாசத்துடனும் காணப்படும்.
எனினும், இந்த அளவு வேறுபாடு மனிதக் கண்களுக்கு பெரிதாகப் புலப்படாது என்றும் வானியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கியமான நிகழ்வு
தொலைநோக்கி போன்ற சிறப்பு கருவிகள் இன்றியும், இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் நேரடியாகக் காண முடியும்.

சராசரியாக இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த ‘புளூ மூன்’ வானியல் ஆர்வலர்களுக்கு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்னர் 2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் புளூ மூன் தென்பட்ட நிலையில், அடுத்த கலண்டர் புளூ மூன் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நிகழும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 11 மணி நேரம் முன்
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam