பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பொய்யுரைக்கின்றார் – ஜோசப் ஸ்டாலின்
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொய்யுரைப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றில் பொய்யுரைத்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நேற்று தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்டதாக இன்று நாடாளுமன்றில் சரத் வீரசெகர கூறுகின்றார்.
எனினும் இது முற்றிலும் பொய்யானது. பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் பரிசோதனை செய்யாது எவ்வாறு தனிமைப்படுத்துமாறு பரிந்துரை செய்வது? இது முற்று முழுவதும் பொய்யானது.
எமக்கு பற்பசை கூட பௌத்த பிக்கு ஒருவர் வழங்கினார். எங்களுக்கு ஒரு துணி துண்டு கூட வழங்கவில்லை. இங்கு இருப்பவர்கள் காலை முதல் கட்டில் விரிப்புக்களை சாரமாக கட்டியிருந்தனர்.
செல்லும் இடத்தில் எல்லாம் உண்டு என பொலிஸார் கூறினர். நீர்கொழும்பு பொலிஸார் எமக்கு மருந்து வழங்கியதாக சரத் வீரசேகர கூறுகின்றார் அது பச்சைப் பொய். சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் வாகனத்தை நிறுத்தி கால் இறாத்தல் பாணும் ஒர் வாழைப்பழமும் வழங்கினார்கள்.” என ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டு;ள்ளார்.