சில பெண்களுக்கு மட்டும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சலுகை வழங்குகின்றார்! சபையில் அம்பலப்படுத்திய அநுர
சில பெண்களுக்கு மட்டும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர சலுகை வழங்குவதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.
சில பெண்களை தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு ஆடைகளை எடுத்துச் சென்று கொடுக்கும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஏன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டமை குறித்து மனம் இரங்கவில்லை என அனுரகுமார கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி அண்மையில் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை தொடர்பு கொண்டதாகவும், ஆடைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு கோரியதாகவும், அதற்கு அமைச்சர் அனுமதி வழங்கியதாகவும் கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமக்கு பியூமி அழைப்பு எடுத்ததாகவும், ஆடைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியதாகவும் சரத் வீரசேகர ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்களை பொலிஸார் பலவந்தமாக பஸ்களுக்கு ஏற்றிச் செல்ல முயற்சித்தபோது அவர்களின் ஆடைகள் கிழிந்திருந்தன. இந்த விடயத்தை சுட்டிக்காட்டியே அனுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதன் போது தாம் யாருக்கும் ஆடைகளை எடுத்துக்கொண்டு செல்லவில்லை எனவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலினுக்கு ஆடைகளை எடுத்துச் செல்ல அனுமதித்திருந்தால் அதனையும் நீங்கள் விமர்சனம் செய்வீர்கள் எனவும் சரத் வீரசேகர பதிலளித்திருந்தார்.