சட்டவிரோத ஆட்கடத்தலின் பிரதான சூத்திரதாரி கடற்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை அனுப்பும் வர்த்தகத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டு வந்த கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் நேவி கமல் என்ற நபர், 9 ஆண்டுகளுக்கு பின்னர் பசறையில் கைது செய்யப்பட்டதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபரை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவை பிறப்பித்திருந்ததாகவும் சந்தேக நபர், போலி பெயர்கள், போலி ஆவணங்களை பயன்படுத்தி, 9 ஆண்டுகளாக குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் சிக்காது தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
சந்தேக நபர், தனது மனைவியின் தந்தையின் நலன் குறித்து அறிய பசறைக்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, கடந்த 29 ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் விசேட குழுவிரால் கைது செய்யப்பட்டதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நபர், கடற்படையின் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிக்கொண்டு, இந்த சடடவிரோத வர்த்தகத்தை வழிநடத்தி வந்துள்ளார்.
இதற்கு கடற்படையை சேர்நத சிலரது உதவியும் கிடைத்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2012 ஆம் ஆண் ஜூன் மாதம் 7 ஆம் திகதி 87 பேர் நீர்கொழும்பில் இருந்து தருஷா புத்தா என்ற ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஆழ்கடல் மீன்பிடி படகு இடைநடுவில் பழுதடைந்து, இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அந்தோணி என்ற ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் 87 பேரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
