பயனற்றுப் போகின்றதா முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்கள்: கவனிப்பாரற்று இருக்கும் பிரதான வீதி
முல்லைத்தீவில் அதிகளவான மக்கள் நாளாந்தம் பயன்படுத்தி வரும் வீதியொன்றின் மோசமான நிலை தொடர்பில் பொதுமக்களால் கருத்துக்கள் பல முன்வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் உள்ள உடுப்புக்குளம் பாடசாலை வீதியும் மக்கள் பயன்பாட்டுக்கு மிகவும் கடினமானதாக மாறியுள்ள வீதிகளில் ஒன்றாக இருக்கின்றது.
எனினும் நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இரவு பகலாக இந்த வீதியின் ஊடாக பயணப்பட்டு வருகின்றனர்.அதிகளவான அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொள்வதற்காக அவர்களது பயணங்கள் அமைவதனையும் அறிய முடிகின்றது.
கிராம பொது அமைப்புக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பில் உருப்படியான எத்தகைய நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளாது இருப்பது வருத்தமளிப்பதாக அவர்களில் பலரும் ஒருமித்த கருத்துடையவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உடுப்புக்குளம் பாடசாலை வீதி
முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் முல்லைத்தீவில் இருந்து ஆறாவது கிலோமீற்றர் தூர வீச்சில் பிரதான வீதியில் இருந்து மேற்குப் பக்கமாக ஆரம்பித்து உப்புமாவெளிக் கிராமத்தினூடாகச் செல்லும் வீதியே இங்கு உடுப்புக்குளம் பாடசாலை வீதி என அடையாளப்படுத்தப்படுகின்றது.
உடுப்புக்குளம் பாடசாலை வீதி என எடுத்துரைக்கப்படும் வீதி முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியையும் தண்ணீரூற்று குமுழமுனை வீதியை இணைக்கும் வீதியாகவும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகளவான மக்கள் பயன்படுத்தும் பகுதியாக பிரதான வீதியில் இருந்து உடுப்புக்குளம் பாடசாலை வரையான வீதியின் பகுதி அமைவதும் நோக்கத்தக்கது.இந்த பகுதி 750 மீற்றர் வரையானதாகும்.
உடுப்புக்குளம் மற்றும் உப்புமாவெளி மக்கள் நாளாந்தம் பயன்படுத்துவதோடு இந்த வீதியானது தூண்டாய் வடக்கு கிராம மக்களின் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டுக்குள்ளாவதும் குறிப்பிடத்தக்கது.
பிரதான தேவைகளுக்கான பயணப் பாதை
உடுப்புக்குளம் கிராமத்து மக்களினதும் கொத்தியாகாமம் மக்களினதும் முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியை அடையும் பிரதான மார்க்கமாக உடுப்புக்குளம் பாடசாலை வீதி அமைந்திருக்கின்றது.
உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலய பாடசாலைக்கு வந்து செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகர்களினதும் பிரதான பாதை இதுவாகும்.
மாலை நேர கல்வி நிலையத்திற்கென உடுப்புக்குளத்தினைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வழித் தடத்தினையே பயன்படுத்தி வருகின்றனர்.அவர்களது கல்வி நிலையம் முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதிக்கு அண்மையில் அமைந்துள்ளது.
பாடசாலைக்கு அண்மையில் உடுப்புக்குளம் குழந்தையேசு கோவில் மற்றும் அதிசய விநாயக ஆலயம் கிராம சேவகர் அலுவலகம்,பொது நோக்கு மண்டபம், முன்பள்ளி என அதிகளவான மக்கள் பயன்பாட்டு நிறுவனங்கள் இந்த வீதியின் வழித்தடத்தில் அமைந்துள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.
பொதுக் கூட்டம்
ஒவ்வொரு முறையும் நடைபெறும் பொதுக்கூட்டம்,அபிவிருத்திச் சங்க கூட்டம்,சிககூ சங்க கூட்டம், கமக்கார அமைப்பு, மாதர் சங்கம், விளையாட்டுக்கழக கூட்டங்களின் போது உடுப்புக்குளம் பொதுநோக்கு மண்டபம்,விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
அப்போதெல்லாம் குன்றும் குழியுமாக இருக்கும் இந்த வீதியின் வழியே பயணிக்க நேருவது மிகவும் கடினமான ஒன்றாக இருப்பதாக மக்களிடையே மேற்கொண்ட தேடலின் போது அவர்களிடையே பெறப்பட்ட கருத்துக்கள் அமைவதும் நோக்கத்தக்கது.
பத்து நிமிடத்தில் பயணிக்க வேண்டிய தூரத்தினை அதிலும் கூடிய நேரம் எடுத்துப் பயணிக்க வேண்டியிருப்பதாகவும் தங்களின் வாகனங்களை சிரமப்பட்டு செலுத்திச் செல்ல வேண்டியுள்ளதாகவும் உடுப்புக்குளம் பாடசாலைக்கு பணியாற்றச் செல்லும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
எல்லோருக்கும் இந்த பாதை வழியே பயணிப்பதில் இருக்கும் கடினமும் சிரமமும் தெரிந்த போதும் அவர்கள் மௌனமாக பயணிப்பதாகவே உணர முடிகின்றதாக சமூக ஆர்வலர் சுட்டுவதும் நோக்கத்தக்கது.
இந்த பாதையின் சிதைந்த நிலை தொடர்பில் கருத்தில் எடுக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் கிராமிய பொது அமைப்பினரும் இந்த பாதையைத் தான் பயன்படுத்திச் செல்கின்றனர்.அவர்களிடம் எடுத்துரைக்கும் போது ஒரு புன்னகையோடு கடந்து போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேங்காய் கொள்வனவுக்கான பாதை
தெங்குப் பயிர்ச்செய்கையில் வளமான விளைவுகளை தந்து கொண்டிருக்கும் உடுப்புக்குளத்தில் இரு தேங்காய் விற்பனை மையங்கள் செயற்பட்டு வருகின்றன.
அவை இந்த பாதையின் வழியே முறிப்பு நோக்கிய திசையில் பாடசாலையை கடந்துள்ள இடத்தில் அமைந்துள்ளன.
முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியினூடாக பயணப்பட்டு வரும் தேங்காய் கொள்வனவு பாரவூர்திகள் உடுப்புக்குளம் பாடசாலை வீதியின் ஊடாகவே தங்கள் பயணத்தினைச் செய்து தேங்காய்களை கொள்வனவு செய்து சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
பாரவூர்திகளை சிதைந்து போயிருக்கும் இந்த குறுகிய பாதை வழியே செலுத்திச் செல்வது மிகவும் கடினமான ஒரு செயற்பாடாக இருக்கின்றது.
தொழில் வளம் உள்ள ஒரு கிராமத்தின் பிரதான பாதை இப்படி இருப்பதும் அதனை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கண்டு கொள்ளாது மக்கள் இருப்பதும் தன்னை ஆச்சரியப்படுத்துவதாக இந்தப் பாதை வழியே தேங்காய் கொள்வனவுக்கு வந்து செல்லும் பாரவூர்தி சாரதியொருவர் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.
தொழில் வளம் பாதிப்படையும்
உடுப்புக்குளத்திற்குள் உள் நுழைவதற்கான பாதையாக இருக்கும் பாதைகளில் ஒரளவு நல்ல நிலையில் இருக்கும் பாதை உடுப்புக்குளம் பாடசாலை வீதியாகும்.
இதுவும் பழுதடைந்து செல்வதால் உடுப்புக்குளத்தில் தொழில் வளம் பெரியளவில் பயணச் செலவுகளை ஏற்படுத்தி கிடைக்கும் இலாபத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது கவனமெடுக்கப்படாது இருப்பது பொறுப்பற்ற செயலாகும்.
கற்களை அடுக்கி அதன் மீது தார் ஊற்றி அமைக்கப்பட்ட குறுகிய பாதையாக உடுப்புக்குளம் பாடசாலை வீதி இருக்கின்றது.
இந்தப் பாதை மீள் புனரமைப்புக்குட்படுத்தி பல வருடங்கள் ஆகின்றது.இடையில் ஒரு தடவை மீள் புனரமைப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது 25 மீற்றர் தூரத்திற்கு மட்டுமே முன்னெடுக்கப்பட்டது என கிராம வாசியொருவர் குறிப்பிடுகின்றார்.
சிறு தொழில் முயற்சியாளர்கள், தெங்கு, நெல்,நிலக்கடலை, சிறு தானியப் பயிர்கள் என பல தரப்பட்ட பயிர்ச் செய்கையாளர்களின் பயணங்களையும் அரச துறைசார்ந்த மற்றும் தனியார் துறைசார்ந்த தொழிலாளர்களின் பயணங்களையும் இந்த பாதையின் சிதைந்து போய்க் கொண்டிருக்கும் நிலை பெருமளவில் பாதிக்கும் என்பது உணரப்படாதது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் கிராமிய அமைப்புக்கள் கிராமத்திற்கான எல்லா பாதைகளும் பயன்படுத்துவதற்கேற்றதாக இல்லாது மாறிக் கொண்டிருக்கும் போது விரைந்து செயற்பட்டு ஒரு பாதையையாவது சீராக பேணிக் கொள்ள முற்பட வேண்டும்.
புனரமைப்புக்கான அரச உதவி தாமதமானால் மக்களாக முயன்று பாதையின் சிதைந்த பகுதிகளை கிரவல் இட்டு அழுத்தி தற்காலிகமாகவேனும் பாதுகாக்க முயற்சிக்கலாம்.எனினும் அது பற்றிய எத்தகைய முனைப்பும் அங்கு இல்லை என சமூக விடய ஆய்வாளர் இது தொடர்பில் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
காபைற் வீதி
இந்த வீதியின் நிலை தொடர்பில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் சார்பாக பேசிய ஒருவர் இது காபைற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளதாகவும் அதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டு வருவதும் நோக்கத்தக்கது.
இந்த காபைற் வீதி அமைப்பானது முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியை தண்ணீரூற்று குமுழமுனை வீதியுடன் இணைக்கும் வீதியின் முழுமைக்கும் பொருந்தும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
காபைற் வீதியமைப்பு நிகழும் வரை இருக்கும் தார் வீதியின் சிதைந்த பகுதிகளுக்கு கிரவல் மண் இட்டு அழுத்தி செப்பம் செய்து பயணத்தினை இலகுவாக்குவதே பொருத்தமானதாக இருக்கும் என்பது தொடர்பில் அவர் சுட்டிப் பேச மறந்திருந்தார்.
மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்கள்
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் இது போன்ற தொழில் முனைப்புள்ள கிராமங்களின் தொழில் முயற்சிக்கு உறுதுணையாகும் விடயங்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதாக அவை அமைவதில்லை என்ற குற்றச்சாட்டினை முன் வைப்பதற்கு உடுப்புக்குளம் பாடசாலை வீதியின் சிதைந்து சொல்லும் நிலை சிறந்த சான்றாகும் என சமூக விடய ஆய்வாளர் குறிப்புரைத்தமையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.
தனிநபர் வருமான அதிகரிப்பினையும் ஒரு பகுதியாக நாட்டின் பொராளாதார அபிவிருத்தியின் எழுச்சி கொண்டிருக்க தவறுவதாகவே இன்றைய இலங்கையின் பொருளாதார நகர்வுகள் அமைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 11 April, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.