இந்துக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
ஆலயங்களில் தற்போது திருவிழாக்கள்,சமய நிகழ்வுகள் என்பன சுகாதார விதிமுறைகளுக்கு மாறாக இடம்பெறுவதாலும், ஆலயங்கள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாலும் ஆலய நிர்வாகத்தினரும், பக்தர்களும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டுமென பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயம் இரு வாரங்கள் முடக்கப்பட்டு ஆலய நிர்வாகத்தினரில் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் நாம் அறிந்ததே. மேலும், பருத்தித்துறை சிவன் ஆலய அம்பாள் ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி சுவாமி வெளி உலா வந்தது. இதனால் திருவிழா தடைப்பட்டது.
பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மூலம் மீண்டும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது.
அத்தோடு, மட்டக்களப்பு ஐயங்கேணி வைரவர் ஆலயத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி தீமிதிப்பு இடம்பெற்றதால் ஆலய அறங்காவலர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அத்துடன் , களுவங்கேணி மாரியம்மன் ஆலய உற்சவத்தில் பங்கேற்ற 114 பேருக்கு கோவிட் தொற்றிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே, இவற்றை கருத்திற்கொண்டு ஆலய நிர்வாகத்தினரும், பக்தர்களும் முடக்காத வண்ணம் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றி ஆலயங்களை முடக்காமல் பார்த்துக்கொள்வது எமது பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.




