ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலிப்பதில் இருந்து விலகிய நீதிபதி (Photos)
அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதில் இருந்து கொழும்பு நீதவான் ஹர்ஷன கெகுனாவல விலகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.
கொழும்பு - கோட்டை பொலிஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இன்று(06) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த போராட்டம் தொடர்பாக 102 வழக்குகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான உண்மைகளை முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கோட்டை பொலிஸ் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஷவீந்திர விக்ரம தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அரச சட்டத்தரணி முன்வைத்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல, குறித்த கோரிக்கையை மீளப்பெற்று வேறு நீதவானிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



