சிறைச்சாலைக்குள் பூஜித் - ஹேமசிறியின் பரிதாப நிலை! சிறப்பு சலுகைகள் மறுப்பு..
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறைச்சாலையில் எவ்வித சிறப்பு வசதிகளும் வழங்கப்படவில்லை என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அனுருத்த கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
போதிய உளவுத் தகவல்கள் இருந்தும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதாகத் தெரிவித்து கடந்த 31ஆம் திகதி இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
வெளியில் இருந்து உணவில்லை..
இந்தநிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் (ஜம்பர்)ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் இருக்கும் அறைகளுக்கு பூஜித் மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மாற்றப்பட்டுள்ளதாகவும், சிறை விதிமுறைகளுக்கு அமைவான சட்டத்திட்டங்கள் அவர்களுக்குப் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறைக்கு வெளியே இருந்து உணவுகளைப் பெற்றுக்கொள்ள இருவருக்கும் அனுமதி இல்லை என்பதுடன், சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாக வாரத்திற்கு ஒரு முறை அவர்களுடைய குடும்பத்தார் அவர்களை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், எவ்வித சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படாது எனவும், இந்த சட்டத்திட்டங்கள் குறிப்பாக மரண தண்டனைக் கைதிகளுக்குப் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவரும் மருத்துப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டதாக சிறை்ச்சாலை ஊடகப் பேச்சாளர் அனுருத்த கஜநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.