ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் விவகாரம்: வெளியிடப்பட்ட அறிவிப்பு நீக்கம்
தமது இரண்டு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்ப காலத்தில் இலங்கைக்கு வந்து திரும்பமுடியாமல் தொடர்ந்தும் நாட்டில் தங்கியுள்ள ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள், அவர்களின் வீசாக்களை ஒழுங்கமைத்துக்கொள்ளுமாறு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அத்தகைய புதுப்பிப்பை வெளியிடவில்லை என்று கருதுவதால் இன்று அறிவிப்பு நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவையின் ஒப்புதல்
இருப்பினும், பெப்ரவரி 22 ஆம் திகதியன்று, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்,ரஷ்யமற்றும் யுக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் வீசா நீடிப்புகள் பெப்ரவரி 23 ஆம் திகதியுடன் முடிவடைகிறது என்பதைத் தெரிவிக்குமாறு சுற்றுலா அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.
முன்னதாக இந்த பயணிகள் யுத்தம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இலங்கையில் தங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் வீசாக்களை நீடித்துவருகின்றனர்.
எனினும் தற்போது இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் விமான சேவைகள் இடம்பெறுவதால் அவர்கள் நாடு திரும்பமுடியும் என்று குடிவரவுத்திணைக்களம் தெரிவித்திருந்தது.
குறித்த அறிவிப்பின்படி, 2024 மார்ச் 7ஆம் திகதியன்று காலாவதியாகும் 14 நாள்
சலுகைக் காலத்துக்குள் முறையான செயல்முறையின் மூலம் வீடு திரும்ப தற்போது
இலங்கையில் தங்கியுள்ள ரஷ்ய மற்றும் யுக்ரைனிய சுற்றுலாப்பயணிகளின் வீசாக்கள்
நீடிக்கப்படும்.
எனினும் அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் இது தொடர்பான தீர்மானத்தை எடுக்கமுடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.
எனினும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சகங்களுக்கு இடையே தற்போது மோதல் நடந்து வரும் நிலையில், வீசா குறித்த நிலைப்பாடு தெளிவாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |