இந்துக்களுடைய பிரச்சினை தீர பா.ஜ.க தலைவரின் இலங்கை விஜயம் தீர்வாக அமையும் : தமிழ்த்திரு மாதவன்
இலங்கையில் இந்துக்களுக்கு அதிகமான பிரச்சினை உள்ளது. இதனை தீர்த்து தருவதற்கு பா.ஜ.க தலைவரின் இலங்கை வருகை நிச்சயமாக அமையும் என சிவசேனை அமைப்பின் வன்னி பிராந்திய இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று (05) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் தமிழ்நாட்டினுடைய பா.ஜ.க தலைவர் அண்ணாமலையினை சிவசேனை அமைப்பின் இணைத் தலைவர் என்ற வகையில் சந்தித்திருந்தோம். இந்தியா பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தோம். அத்தோடு வடக்கு, கிழக்குப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கான உதவிகளை வழங்க வேண்டும்.
மேலும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கப்பல் சேவையை மேற்கொள்ளப்பட வேண்டும். பலாலி விமான நிலையத்திற்கும் திருச்சி, சென்னை, மதுரை போன்ற இடங்களிற்கான விமான சேவைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு தர கோரியிருந்தோம்.
அத்தோடு ராமர்பாலம் ஊடாக ராமர் வந்து சென்றிருந்தார். அதற்காக தலைமன்னாரில் ராமர் கோயில் அல்லது ஆஞ்சனேய சிலை அமைப்பதற்கு கோரியிருந்தோம்.
மேலும் 13 ஆவது திருத்தச் சட்டம் மிக முக்கியமாக நெருக்கமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இருக்கின்ற இந்த 13ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நாங்கள் கேட்டிருக்கின்றோம்.
குறிப்பாக இலங்கையில் இந்துக்களுக்கு அதிகமான பிரச்சினை உள்ளது. இதனை தீர்த்து தருவதற்கு பா.ஜ.கவின் தலைவரின் இலங்கை வருகை நிச்சயமாக அமையும். எங்களுடைய இந்த கோரிக்கைகள் அனைத்தையும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவிக்குமாறு கோரியிருந்தோம்.
எமது இக்கோரிக்கைகள் தொடர்பாக வெகுசீக்கிரத்திலேயே இலங்கையில் இருக்கக்கூடிய
நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டெடுக்க நிச்சயமாக உறுதுணையாக இருப்போம்
என்று அண்ணாமலை கூறியிருக்கின்றார்” என இதன்போது குறிப்பிட்டுள்ளார்.



