முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து - 4 பேர் பலி - பொலிஸார் வெளியிட்ட தகவல்
அனுராதபுரம் - குருணாகல் பிரதான வீதியில் தலாவ-மிரிகம சந்திக்கு அருகில் இன்று அதிகாலை சம்பவித்த வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
அனுராதபுரத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற லொறியும், குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வேனும் இன்று அதிகாலை தலாவ-மிரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த வேனின் ஓட்டுநர் மற்றும் லொறியின் ஓட்டுநர் உட்பட 6 பேர் சிகிச்சைக்காக தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதி
வேனில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வேனில் பயணித்த ஏனைய மூன்று பேர் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மற்றொருவர் உயிரிழந்தார்.
ஏனைய இருவரின் நிலைமை மோசமாக உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். தனியார் ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்த இந்த வேன் ஜாஎலவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்தது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம்
உயிரிழந்தவர்களில் வேன் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வேனின் ஓட்டுநர் உறங்கியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்து குறித்து தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



