பண்டோரா ஆவணங்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் ஜனாதிபதிக்கு அறிவிப்பு
பண்டோரா ஆவணங்கள் (Pandora Papers) சம்பந்தமாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆரம்பித்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya rajapaksa) அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டோரா ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மற்றும் அவற்றின் கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பான உடனடியாக விசாரணைகளை நடத்தி, ஒரு மாதத்திற்குள் அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி, ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹனதீர,(Harikupta Rohanadeera) கடந்த ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி, ஜனாதிபதியின் உத்தரவை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆணைக்குழுவின பணிப்பாளர் டப்ளியூ.கே.டி. விஜேரத்ன (W.K.D. Wijeratne) கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
திருக்குமார் நடேசனின் வங்கிக்கணக்குளின் விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளதுடன் அவை கிடைத்து வருவதாக விஜேரத்ன அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை எனவும் கோரப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் ஏனைய மேலதிக விசாரணைகளை நடத்திய பின்னர் இறுதி அறிக்கையை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் விஜேரத்ன அறிவித்துள்ளார்.
