யாழில் வன்புணர்வு குற்றச்சாட்டில் கைதான கடற்படை அதிகாரி
புங்குடுதீவு கடற்படை முகாமில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் அங்கு பணியாற்றிய கடற்படையை சேர்ந்த யுவதி ஒருவரை கடந்த மாதம் 25ஆம் திகதி வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த அதிகாரி மற்றும் யுவதி இருவரும் புங்குடுதீவு கடற்படையினால் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, காங்கேசன்துறையில் அமைந்துள்ள வட பகுதி கட்டளை பணியகத்தின் கடற்படை முகாமிற்கு இருவரும் அனுப்பப்பட்டனர்.
மருத்துவ அறிக்கை
அதன் பின்னர், அங்கு விசாரணைகள் நடைபெற்றதோடு அங்குள்ள வைத்தியசாலையில் யுவதிக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இருவரும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், மருத்துவ அறிக்கையில் பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு நடைபெற்றமைக்கு உரிய சான்றுகள் காணப்பட்டதால் கடற்படை வீரரையும் கடற்படை யுவதியையும் விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் காங்கேசன்துறை பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (02) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடற்படை வீரரை முற்றபடுத்திய வேளை எதிர்வரும் 16ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.



