பிரித்தானியாவை தாக்கவுள்ள புயல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் குளிருக்கு மத்தியில் சக்திவாய்ந்த புயல் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோரெட்டி' (Goretti) என்ற புயல் எதிர்வரும் வியாழன்(8) மற்றும் வெள்ளிக்கிழமை(9) ஆகிய தினங்களில் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மற்றும் பனிப்பொழிவு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஞ்சள் எச்சரிக்கை
குறிப்பாக வியாழன் மாலை முதல் வெள்ளிக்கிழமை மதியம் வரை பனி மற்றும் பலத்த காற்றிற்கான 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் 20 செ.மீ வரை பனி குவிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானியா முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஸ்கொட்லாந்தின் பல பகுதிகளில் புதன்கிழமையும் பாடசாலைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திங்கட்கிழமை இரவு இந்த குளிர்காலத்தின் மிகக்குளிர்ந்த இரவாகப் பதிவானது. நோர்போக் பகுதியில் வெப்பநிலை மறை 12.5°C ஆகக் குறைந்தது.
விமானங்கள் இரத்து
இந்த அதீத வானிலை மாற்றத்தால் போக்குவரத்து மற்றும் விளையாட்டுத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக ஸ்கொட்லாந்தில் பல கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், வீதி மற்றும் தொடருந்து போக்குவரத்திலும் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ளன.

பிரித்தானியா மட்டுமின்றி பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஹங்கேரி ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
மேலும், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், ஸ்கைபோல் விமான நிலையத்தில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.