வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேசம் தான் நீதியை பெற்றுத்தர வேண்டும்
சர்வதேசத்திடம் தான் நீதியை எதிர்பார்க்கிறேன் என வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்க அம்பாறை மாவட்ட தலைவி த. செல்வராணி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினமாகும் அதனை முன்னிட்டு இன்று (06) திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”இம்முறை சர்வதேச காணாமல் போனோர் தினத்தினை திருகோணமலை நகரில் போராட்டமாக முன்னெடுக்கவுள்ளோம் இதற்காக அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தொடர்ச்சியாக எங்கள் போராட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் நீதியை பெற்றுத்தரவில்லை இதனால் 14 வருடகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு எமது உறவுகளுக்காக பாடுபடுகிறோம்.
இறுதி யுத்தத்தின் போது சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் இதில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.
வடக்கு கிழக்கு உட்பட எட்டு மாவட்டங்களில் போராட்டங்களை நடாத்தி வருகிறோம் எமக்கான நீதியை சர்வதேசம் தான் பெற்றுத்தர வேண்டும்“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட தலைவிகளும் கலந்து கொண்டனர்.
மேலதிக தகவல் - குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |