ஜப்பானில் அதிகரிக்கும் சூறாவளியின் தாக்கம்: கனமழையால் நால்வர் பலி - 6 பேர் மாயம்
ஜப்பானின் பசிபிக் கடற்கரைப் பிராந்தியத்தைத் தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளிப் புயல் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக ஜப்பானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“துஜுவான்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளிப் புயலினால் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து, கனாஜாவா மற்றும் சிபா ஆகிய பிராந்தியங்களில் பல இடங்களில் பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
யோகோசுகா நகரில் நிலச்சரிவினால் ஏற்பட்ட மண் சரிந்து வீடொன்றிற்குள் புகுந்ததில் 60 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பல்வேறு இடங்களில் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மிவுரா நகரில் நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்த வீடொன்றில் காணாமல் போன நபரொருவரைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் முழ்கிய பகுதி
மேலும், சிபா பிராந்தியத்தில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் காற்று காரணமாக அப்பகுதியில் உள்ள சுமார் 45,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
புயல் தற்போது வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றுள்ள போதிலும், மீட்புப் பணிகளும் வீதிகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.