இலங்கையில் வேலை நாட்களின் எண்ணிக்கையை குறைக்க யோசனை
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானத்துள்ளது.
டொலர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான யோசனையொன்றை ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த யோசனையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
அரச வங்கிகள் இரண்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ந்து கடன் வழங்கினால், வங்கிகள் இரண்டின் வீழ்ச்சியை தடுப்பது கடினமாகிவிடும். அந்த இரண்டு வங்கிகளிடமிருந்தும் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்தவும் மத்திய வங்கி யோசனை முன்வைத்துள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் இரண்டு அரச வங்கிகளுக்கும் செலுத்த வேண்டிய கடன் தொகை 56 ஆயிரம் கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கூட்டுத்தாபனத்திற்கு மேலும் கடனுதவி வழங்கினால் இரண்டு வங்கிகளும் வீழ்ச்சியடைவதற்கும் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்பதால், உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எரிபொருள் விற்பனையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைப்பதற்காக எரிபொருள் விலையை அதிகரிக்குமாறும் மத்திய வங்கி அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளது.
வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானத்துள்ளது. இதன்படி, நிறுவனங்களின் செயற்பாடுகளை காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.30 மணிவரை தொடரவும் யோசனைகள முன்வைக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேலை செய்வதற்கும் முன்னதாக வீட்டிற்குச் செல்லும் திட்டத்தையும் மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.
தனிப்பட்ட வாகனங்கள் பயன்படுத்துவதை குறைத்து பொதுப் போக்குவரத்தில் மக்களை திருப்பிவிடவும் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, ஏற்பட்ட நெருக்கடி நிலை மற்றும் எரிபொருளை சிக்கமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் பாரிய ஊடகப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறும் மத்திய வங்கி முன்வைத்துள்ள யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.