விசாரணைக்காக லொஹான் ரத்வத்தவை அழைத்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் கடந்த 12ஆம் திகதி அத்துமீறிய ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த(Lohan Ratwatte), அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவரது தலையில் துப்பாக்கி வைத்து அச்சறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து பல தரப்பினராலும் ஸ்ரீலங்கா காவல்துறைத் தலைமையகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், கைதிகளின் உரிமை மீறப்பட்டிருப்பதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அண்மையில் அநுராதபுரம் சிறைக்கு விஜயம் செய்து கைதிகளிடம் வா்ககுமூலத்தைப் பதிவுசெய்திருந்தார்கள்.
இதனையடுத்து விசாரணைக்காக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. விசாரணைக்கான அழைப்பிற்கமைய இராஜாங்க அமைச்சர் ரத்வத்த நேற்றைய தினம் முன்னிலையாகியிருக்க வேண்டும் என்றாலும் அவர் முன்னிலையாவதைத் தவிர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேறொரு தினத்தில் தனக்கு அனுமதி அளிக்கும்படி ஸ்ரீலங்கா அமைச்சர் லொஹான் ரத்வத்த கேட்டுக்கொண்டதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.