பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூருவதை தண்டிக்கும் அரசாங்கம்! கருணாகரம் விமர்சனம்
ஜனநாயகத்தை கடைப்பிடிக்க வேண்டிய இந்த நாட்டில், பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூருபவர்களை கூட தண்டிக்கும் நிலையிலேயே இந்த அரசாங்கம் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டித்தமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தகவல் அறிந்து நேற்று (13.10.2022) நீதிமன்றத்தில் முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பிடியாணை
மேலும் கூறுகையில், “இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சி இன்று எங்களை நீதிமன்றம் வரை கொண்டு சென்று நிறுத்தியிருக்கின்றது.
உண்மையிலேயே எங்களுக்கு பிடியாணை இருப்பதாக யாருமே தெரிவிக்கவில்லை. விவசாய அமைப்பு கூட்டத்திற்காக கொக்கட்டிச்சோலை சென்ற போது அங்கு ஒரு பொலிஸ் அதிகாரி எனக்கும் தர்மலிங்கம் சுரேசுக்கும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தினால் பிடியாணை பிறப்பித்திருப்பதாக தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை படுகொலை
“கொக்கட்டிச்சோலை படுகொலை” என்று
கூறப்படும், 1987ஆம் ஆண்டு காலகட்டத்தில் மகிழடித்தீவு இறால் பண்ணையை
சுற்றியிருந்தவர்கள், இறால் பண்ணைக்குள் தஞ்சம் அடைந்தவர்கள் என எந்தவித
போராட்ட இயக்கங்களுடனும் தொடர்புபடாத பொதுமக்களை இலங்கை அரசாங்க படைகள் கொன்று
குவித்தனர்.
அவ்வாறு கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவுகூறும் வகையில் மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டிருக்கின்ற நினைவு தூபியில் ஆண்டு தோறும் அவர்களை நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்துவது வழமை.
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் போராட்டத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூரக்கூடாது என்கின்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2015 ஆண்டு தொடக்கம் 2019 ஆண்டு வரை எமது உறவுகளை நினைவு கூருவதற்கு எமக்கு உரிமை இருந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கோட்டாபய அரசாங்கம் அதனை மறுத்திருந்தது. இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் நாங்கள் அவர்களை நினைவு கூர்ந்து நகழ்வொன்றை நடத்தினோம்.
தடையுத்தரவு
இதன்போது குறித்த நினைவுகூரல் நிகழ்வை நடத்த கூடாது என எவ்வித நீதிமன்ற தடையுத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை. எனினும் நினைவுகூரலை மேற்கொண்டு நாங்கள் விளக்கேற்றும் போது கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் அங்கு வந்து இடையூறு விளைவித்தனர்.
எனினும் நாங்கள் தொடர்ச்சியாக நினைவேந்தலை முன்னெடுத்தோம். குறித்த விடயத்திற்கு அவர்களால் தடையுத்தரவு பிறப்பிக்கப்படவும் இல்லை, தடைத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீறியமைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அழைப்பாணை விடுவிக்கப்படவும் இல்லை.
ஆனால் எமக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக அறியக் கிடைத்தது. இந்தநிலையில் நாங்கள் எமது சட்டத்தரணிகள் ஊடாக நேற்று (13.10.2022) நீதிமன்றில் முன்னிலையாகினோம்.
இதற்கமைவாக எதிர்வரும் மாதம் இரண்டாம் திகதிக்கு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.
ஜனநாயக நாடு
ஜனநாயகத்தை கடைப்பிடிக்க வேண்டிய இந்த நாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை கொடுக்க வேண்டிய இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் எங்களை கூட தண்டிக்கும் அளவிற்கு இருக்கின்றது.
இவ்வாறு எங்களை பயமுறுத்துவதன் ஊடாக எமக்காக உயிர்நீத்த மக்களை நாங்கள் நினைவு கூருவதை தடுத்து விடலாம் என்று நினைக்கின்றார்கள். அது முடியாத காரியம்.
நாங்கள் எமக்காக உயிர்நீத்த எமது மக்களை தொடர்ச்சியாக நினைவுகூர்ந்துக் கொண்டே இருப்போம்” என தெரிவித்துள்ளார்.



