கெடுபிடிகளுக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு! (Photos)
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையில் 1987ம் ஆண்டு இறால் பண்ணையில் பணி புரிந்தவர்களையும் அகதியாக இடம் பெயர்ந்து அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவி பொதுமக்கள் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று (28) மரணித்த மக்களை நினைவு கூர்ந்து தூபியில் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
படுகொலை நடந்த இடத்தில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை 2006ம் ஆண்டு இலங்கை இராணுவம் இடித்தழித்திருந்தது.
இதனால் இறந்தவர்களின் உறவுகளும் பொது மக்களும் இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், இடித்தழிக்கப்பட்ட தூபியினை ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) தனது சொந்த நிதியில் மீளவும் புனரமைப்பு செய்து இருந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மீண்டும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
தற்போதைய அரசு இறந்த உறவுகளை அஞ்சலிக்கும் உரிமையையும் மக்களின் உணர்வுகளையும் மறுத்து பல முட்டுக்கட்டைகளை போட்டு இடையூறுகள் விளைவித்து வரும் நிலையில் ரெலோவின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தலைமையில் ரெலோவின் உப தலைவர் நி.இந்திரகுமார் (பிரசன்னா) ரெலோவின் நிதிச் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம் ஆகியோர் மரணித்த மக்களை நினைவு கூர்ந்து தூபியில் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.












