மில்லியன் கணக்கில் நஷ்டஈடு கோரும் மகிந்தவின் விசுவாசிகள்
நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு 117 மில்லியன் ரூபா நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்மட்டம் பிரதமருக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையின் ஒப்புதலை பெறுமாறு கோரியே இந்த அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்ச பதவி விலகல்
கடந்த 2015-2019 நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச சேவையில் பலர் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டது.
எனினும் கடந்த மே 9 நிகழ்வுகளைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டதால் அது ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவில்லை.
பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு
இந்த நிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்தன பதவியேற்ற பிறகு அந்த யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஆவணங்களின் படி முன்னாள் பிரதம நீதியரசர் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் படி மொத்தம் 27 அதிகாரிகள் பண இழப்பீடுகளை பெற உள்ளனர்.
நீதியரசர் தலைமையிலான குழுவின் பரிந்துரை
இதற்கமைய இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் பியதாச குடபாலகே (24.8 மில்லியன் ரூபா), முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ( 24 மில்லியன் ரூபா), முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க (15 மில்லியன் ரூபா), அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட (24 மில்லியன் ரூபா) ஆகியோர் இழப்பீடுகளைப் பெறவுள்ளனர்.
அத்துடன் நீதிவான் திலின கமகே( 6 மில்லியன் ரூபா), அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன (5.9 மில்லியன் ரூபா), திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ( 4.8 மில்லியன் ரூபா) மற்றும் கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட (4.2 மில்லியன் ரூபா) என மொத்த இழப்பீட்டுத் தொகை 117 மில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் காமினி செனரத், முன்னர் இழப்பீடு கோரி விண்ணப்பித்திருந்த போதிலும்,
இந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி அவர் பண நிவாரணத்தை எதிர்பார்க்கவில்லை என்று
குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.