அரசாங்கம் அரிசி மாஃபியாவுக்கு துணை நிற்பதாக ஜேவிபி குற்றச்சாட்டு
அரிசி மற்றும் நெல் ஆகியவற்றுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதன் மூலம், விவசாயிகள் மற்றும் நுகர்வோரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதை விட, அரசாங்கம், அரிசி மாஃபியாவுக்கு துணை நிற்பதாக ஜேவிபி இன்று குற்றம்சாட்டியுள்ளது.
நெல் மற்றும் அரிசிக்கு அரசாங்கம் விதித்த கட்டுப்பாட்டு விலை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் பயனளிக்கவில்லை, ஆனால் அது பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மட்டுமே பயனளித்துள்ளது.
ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, (Anurakumara Dissanayake) இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
நெல்லுக்கு, முதன்முறையாக 50 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் விதித்தது.அதாவது அந்த விலைக்கு கீழே நெல்லை வாங்க முடியாது.அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையால் விவசாயிகள் தங்கள் நெல் அறுவடையை குறைந்த விலைக்கே விற்க வேண்டியிருந்தது.
அரிசி ஆலைகளும் குறைந்த விலைக்கு நெல் கையிருப்பை வாங்கிய பிறகு அரசாங்கம் இப்போது அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கியுள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு நெல்லுக்கு நியாயமான விலையும் கிடைக்காது, நுகர்வோருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் அரிசி கிடைக்காது.
எனவே இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் பயனளிக்கவில்லை. இது பெரிய அரிசி ஆலைகளுக்கு மட்டுமே பயனளித்தது. இதனை அரசாங்கம் மாஃபியாவின் பக்கத்தை மட்டுமே கருத்திற்கொள்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம் என்று அனுரகுமார சுட்டிக்காட்டினார்.
வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம் சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாது என்றும் சந்தையில் ஏகபோகத்தை உடைப்பதன் மூலம் மட்டுமே அதை செய்ய முடியும் என்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசாங்கத்தின் தலையீடு மிக அவசியம். நெல்லை கொள்முதல் செய்வதிலும் சந்தைக்கு அரிசியை வழங்குவதிலும் உள்ள ஏகபோகத்தை உடைக்க அரசாங்கம், ஒரு பொறிமுறையைக் கொண்டிருக்க வேண்டும்.
சந்தையில் ஒரு போட்டி உருவாக்கப்பட வேண்டும். இதில் அரசாங்கத்தின் தலையீடு முக்கியமானது. எனினும் இந்த பொறிமுறையை அறிமுகப்படுத்த இந்த ஆட்சியாளர்களுக்கு எந்த கரிசனையும் இல்லை என்று அனுரகுமார குற்றம் சுமத்தியுள்ளார்.