அரசாங்கத்திற்கு அதிகமான ஆயுள் காலம் இல்லை!காவிந்த ஜயவர்தன
இலங்கை திரும்பும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை ஹொட்டல்களில் தனிமைப்படுத்த அனுப்பி வைத்து, அரசாங்கம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை சுரண்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு 2021 ஆம் ஆண்டிலும் எந்த வேலைத்திட்டங்களும் இல்லை என்பதால், அரசாங்கத்திற்கு அதிகமான ஆயுள் காலம் இல்லை.
கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர அரசாங்கம் இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாயை அறவிடுகிறது.
இவர்கள் இலங்கையின் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், இரண்டு லட்சம் ரூபா அறவிடப்பட்டு தனிமைப்படுத்தலுக்கான ஹொட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இது முற்றிலும் அநீதியானது என்பதுடன் முற்றாக பணத்தை சுரண்டும் நடவடிக்கை.ஒரு நாடு ஒரு சட்டம் எனக் கூறி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொருவருக்கு தனியான சட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. தற்போதைய அரசாங்கம் வியாபாரிகளை மன்னர்களாக மாற்றும் அரசாங்கமாக மாறியுள்ளது.
வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது மிகவும் கவலைக்குரியது. அரசாங்கம் செய்யும் இந்த வேலை காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.