சுகாதார நடைமுறைகளை பொருட்படுத்தாது இரணைமடுவை பார்வையிட குவியும் பொது மக்கள்
எந்த விதமான சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடிக்காது இரணைமடு குளத்தைப் பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான பொது மக்கள் குவிந்து வருகின்றனர்.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலிருந்து வருகைதந்த பொது மக்களால் இன்றையதினம்(14) கிளிநொச்சி இரணைமடு குளப்பகுதி நிரம்பியிருந்தது.
கொரோனா பாதுகாப்பு சுகாதார நடைமுறைகள் எதனையும் பொது மக்கள் இதன் போது கடைப்பிடிக்கவில்லை, அதிகளவானவர்கள் முகக்வசம் கூட அணிந்திருக்கவில்லை, கூட்டம் கூட்டமாக நெரிசல்களுடன் இரணைமடுகுளப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் நின்றவாறு வான் பாய்வதனை இரசித்து வந்துள்ளனர்.
பொலிஸார் கடமையில் இருக்கின்ற போதும், அவர்களும் பொது மக்களைக் கட்டுப்படுத்தவில்லை, உரிய அதிகாரிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இரணைமடு குளத்தின் நீர்மட்டம் (14) 37.5 அடியாகக் காணப்படுகின்ற நிலையில், அதன் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதோடு, வான் பாய்ந்தும் வருகிறது.
இதனைப் பார்வையிடுவதற்கே பொது மக்கள் மாலைநேரங்களில் குவிந்து வருகின்றனர்.