ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது: ஜனாதிபதியின் உரையை நிராகரித்தது கூட்டமைப்பு
ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு என்பதை ஏற்க முடியாது. அந்த ஒரு காரணத்துக்காகவே ஜனாதிபதியின் நாடாளுமன்ற கொள்கை விளக்க உரையை நிராகரிக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (09.02.2023) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரை மீதான விவாதம் ஆரம்பமானது.
இதில் உரையாற்றியபோதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
"ஜனாதிபதி தனது உரையில் ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு என்று கூறினார். அப்படி ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள முடியாது. அது என்னவென்பது மற்றெல்லோரையும்விட ஜனாதிபதிக்கு மிக நன்றாகவே தெரியும். சமஷ்டி ஆட்சி முறை என்ற அடிப்படையில் ஜனாதிபதி பரப்புரை செய்திருக்கின்றார்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, கடந்த நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக இயங்குகையில் அதன் வழிகாட்டல் குழுவின் தலைவராக இயங்கியபோது எல்லாம் அவர் மிகக் குறிப்பாக சமஷ்டி அரசுக்காகத் தான் நிற்கின்றார், போராடுவார் என்று கூறியிருக்கின்றார்.
இப்போது, அவர் அப்படியே தலைகீழாகக் குத்துக் கணரம் அடித்துள்ளார். அதுமட்டுமல்ல, 'ஒற்றையாட்சி'க்குள் என்று வேறு சொல்கின்றார். அதுவும் “கப்பிட்டல் யு“ மற்றும் “கப்பிட்டல் எஸ்“ எழுத்துக்களைப் பயன்படுத்திச் சொல்கின்றார்.
பல பிரச்சினைகளுக்குத் தீர்வு
அவை குறிப்புணர்துபவை என்னவென்றால் ஆட்சிப் பொறிமுறை ஒற்றையாட்சியாக இருக்கும் என்பதுதான். அத்தோடு, ''நான் இந்த நாட்டை பிரிப்பதற்கு அனுமதிக்கமாட்டேன்'' என்றும் சொல்லியிருக்கிறார்.
நாங்களும் இந்த நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால், அதிகாரங்களை அர்த்தமுள்ள வகையில் பகிருங்கள். ஒற்றையாட்சி முறைக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு நடக்க முடியாதது.
அந்த ஒரு காரணத்திற்காகவே ஜனாதிபதியின் உரையை நாம் நிராகரிக்கின்றோம். ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் தேசிய பிரச்சினை தொடர்பில் முக்கியமாக எதனையும் குறிப்பிடவில்லை ஒருசில விடயங்களை மாத்திரம் தொட்டுச் சென்றுள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், தானும் ஒன்றாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகி பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சித்தனர்.
ஆனால் அவை வெற்றிபெறவில்லை என்றும் ஜனாதிபதி
குறிப்பிட்டார். இந்தமுறை அவை வெற்றிபெறும் என்று தான் எதிர்பார்க்கின்றார்
என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
ஆனால், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முறைமையை அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இராணுவத்துடன் இடம்பெறும் காணி விடுவிப்பு தொடர்பான விடயங்களை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானம்
இந்த விடயம் தொடர்பில் அவர் இங்கு சொன்னவை குறித்தோ அல்லது களத்தில் நடந்துகொண்டிருப்பவை குறித்தோ நாம் மகிழ்ச்சியடையவில்லை. அவர் குறிப்பிட்ட மற்றொரு விடயம் காடுகள், வன உயிரிகள், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பானது.
காடுகள் தொடர்பாகக் கூறும்போது 1985 நிலைக்குத் திரும்பிச் செல்வதைப் பற்றி அவர் இங்கு குறிப்பிட்டார். அதை நாம் வரவேற்கின்றோம். ஆனால், ஒரே கேள்வி எப்போது அவர் 1985 வரைபடத்திற்குத் திரும்பிச் செல்வார்? அது உடனடியாகச் செய்யப்படவேண்டும். இது தொடர்பில் அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று எங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது.
எனவே அதன் அடிப்படையில் காரியங்கள் உடன் நடந்தாக வேண்டும்.
உங்களிடம் 1985 வரைபடம் இருக்கின்றது. இடையில் நீங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை. உடனடியாக அந்த வரைபட எல்லைகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இதற்கு ஒருநாள் போதுமானது. எனவே அது எப்போது நடக்கப் போகின்றது என்பதைப் பார்ப்பதற்கு நாம் ஆவலாக உள்ளோம். பாரதுரமாக கருதப்படும் காணாமல் போனோர் விவகாரத்தை ஜனாதிபதி ஓரிரு வரிகளில் சொல்லி முடித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை 3000க்கும் அதிகமானோர் இராணுவத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் என்றும் கூறுகின்றது.
இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுக்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதிகாரப் பகிர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சின் போது நாம் முக்கியமாகச் சுட்டிக்காட்டிய ஐந்து விடயங்களை ஜனாதிபதி தொட்டுச் சென்றுள்ளார்.
அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை
பொலிஸ் அதிகாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. உள்ளவாறே இருக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் மேலும் தெளிவுபடுத்த வேண்டும்.
பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை காலம் காலமாக பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது. 1996ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளன கூட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டது.
நல்லாட்சி அரசில் பிரதமர் பதவி வகித்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பு பேரவை கூட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்படும் எனப் பலமுறை குறிப்பிட்டார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
கடந்த வருடம் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்தபோது அரசமைப்பின் 21ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும், அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஜனநாயக இலட்சினங்கள் மீள அமுல்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.
அரசமைப்பின் 21 ஆவது திருத்தத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகார தத்துவங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை, அதிகாரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகிழ்வுடன் பதவி
வகிக்கின்றார். ஆகவே, நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும் அல்லது நிறைவேற்று
அதிகாரம் மட்டுப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியால் நாட்டு மக்கள்
ஏமாற்றமடைந்துள்ளார்கள்" - என்றார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
