பிரித்தானியாவின் தற்போதைய கோவிட் நிலவரம்! - வெளியாகியுள்ள புதிய தரவுகள்
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,885 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 18 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு அரசாங்க தரவுகளை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48,79,616 ஆக உயர்ந்துள்ளதுடன், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 207 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கோவிட் தொற்றிலிருந்து இதுவரை 43 லட்சத்து 32 ஆயிரத்து 181 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 4,19,228 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கோவிட் பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
எனினும், தற்போது அதிகரித்து வரும் டெல்டா மாறுபாடு காரணமாக கட்டுப்பாடு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு பிரித்தானியா அரசு ஒத்திவைத்துள்ளது.
கோவிட் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளில் பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் உருமாறிய கோவிட் தொற்றுக்கு எதிராக திறம்பட செயல்படக் கூடியது என்றும் விரைவில் கோவிட் பரவல் கட்டுக்குள் வரும் என்றும் அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது பிரித்தானியாவில் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் அளவை பெற்றவர்களின் எண்ணிக்கை 45,135,880 ஆக உயர்ந்துள்ளது. 33,402,028 பேர் தடுப்பூசியின் இரண்டாவது அளவை பெற்றுள்ளனர்.
இதனிடையே, எதிர்வரும் 19ம் திகதி பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 19ம் திகதிக்கு பின்னர் "கூடுதல் முன்னெச்சரிக்கைகள்" இன்னும் இருக்கக்கூடும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
19ம் திகதிக்கு பின்னரும் கடைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசங்களை அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மருத்துவ வல்லுநர்கள் கோரியுள்ளனர்.