பொய்யான முறைப்பாடு: பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முறைப்பாட்டாளர் ஒருவர், மற்றுமொரு நபருக்கு எதிராக கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் செய்த பொய்யான முறைப்பாடு காரணமாக உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
இதன்படி குற்றவாளியாக கண்டறியப்பட்ட முறைப்பாட்டாளருக்கு 3 மில்லியன் ரூபாயை அபராதமாக விதித்த நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் 'குற்றச்சாட்டு நம்பகமானது என்ற கருத்தை உருவாக்காமல் வெறும் முறைப்பாட்டின் பேரில் பொலிஸ் அதிகாரிகள் வலியச் சென்று கைது செய்ய முடியாது என்று நீதியரசர் பி.பி. அலுவிஹாரே தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
எனவே, உண்மைகள் வெளிப்படையாக இல்லாவிட்டால், முறைப்பாடு நம்பகமானதா அல்லது வழங்கப்பட்ட தகவல் நம்பகமானதா என்பதைச் சரிபார்க்க, தேவையான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளவேண்டும் என்று நீதியரசர் அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு பொதுவான அல்லது தெளிவற்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டால், அரசியலமைப்பின் மூலம் ஒருவருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட சுதந்திரங்கள் கணிசமாகக் குறைக்கப்படுகிறது. எனவே குற்றச்சாட்டைச் சரிபார்ப்பது என்பது கைது செய்வதற்கு முன்னர், பொலிஸ் அதிகாரிகளிடம் விவேகத்தின் ஒரு கூறு தேவைப்படுகிறது என்றும் நீதியரசர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் முதலாம் பிரதிவாதியான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வு பொறுப்பதிகாரி ஜானக மார்சிங்க, மனுதாரரான கொழும்பு 5 ஐச் சேர்ந்த நபருக்கு 75,000 ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மனுதாரருக்கு தலா 25ஆயிரம் ரூபாய்களை நட்டஈடாக செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.