கொழும்பை சுற்றிவளைக்க காத்திருக்கும் குழுவினர்! நாடு முற்றாக முடக்கப்படும் அபாயம்: பல மாற்றங்கள் நிகழலாம்
நாடு முழுவதும் அல்லது மேல் மாகாணத்தினை மாத்திரம் முடக்குவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில், இன்றும் நாளையும் பாரிய போராட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு நாடு முடக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றிவளைக்கப்படும் கொழும்பு நகரம்! நாடு முடக்கப்படலாம்
குறிப்பாக கொழும்பு மாநகரத்தினை முழுமையாக முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்துவதற்கு பல்வேறு தரப்பினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என தெரிவித்து, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளனர்.
நடப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் இருந்து பொதுமக்கள் தலைநகரை நோக்கி இன்று வருகைத் தரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே இந்த போராட்டங்கள் தீவிர நிலையை அடையுமாக இருந்தால் நாட்டை முடக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த போராட்டங்களின் காரணமாக ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தலைநகரின் முக்கிய இடங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதிகளவான அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உச்சபட்ச விரக்தியில் மக்கள்! பல மாற்றங்கள் ஏற்படலாம்
அத்துடன் இலங்கையில் கோரத் தாண்டவம் ஆடி வரும் பொருளாதார நெருக்கடி, பொதுமக்களை உச்சபட்ச விரக்தி நிலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் போராட்டக்களம் இன்னும் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேசமயம், கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து சிறிது சிறிதாக ஆரம்பித்த மக்கள் எதிர்ப்பு மே மாதம் 9ஆம் திகதி விஷ்வரூபம் எடுத்து பாரிய புரட்சி போராட்டமாக வெடித்த நிலையில் பல அரசியல் மாற்றங்களையும் அது தோற்றுவித்திருந்தது. அதன் பின்னரான நாட்கள் நாட்டில் அரசியலில் தீர்மானமிக்க நாட்களாக அமைந்ததோடு, அந்த மாற்றங்களுக்கு மக்கள் போராட்டங்களே வித்திட்டிருந்தன.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி முன்னாள் நிதி அமைச்சரும், ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், ராஜபக்ச சகோதரர்களில் ஒருவருமான பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
அதுவும் அரசியல் சமூக மட்டத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்த நிலையில் நாளைய தினம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள மக்களின் போராட்டம் பாரிய மாற்றங்களை கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.