ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க முடியாது!செல்வம் அடைக்கலநாதன்
கடந்த ஐ.நா.சபையின் அறிக்கை என்பது மிகவும் ஒரு முக்கியம் வாய்ந்த காத்திரமான அறிக்கையாக அமைந்திருந்தது. மக்களும் அதனை வரவேற்ற நிலையில் தற்போதைய ஆணையாளரின் அறிக்கை என்பது மிகவும் கவலை தரக்கூடிய விடயமாக அமைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களின் அறிக்கையை நிராகரிக்க முடியாது.ஆனால் கவலையளிக்கின்றது.
குறித்த அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்ட விடயங்கள் குறிப்பாக இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியாது என தெரிவித்த விடயங்கள் மீண்டும் ஒத்துழைக்கத் தயார் என்று கூறப்படுகின்ற நிலையில் கூறப்பட்ட விடயங்களுக்கு மாறாக எமது தமிழ் பிரதேசங்களில் பல்வேறு அத்து மீறல்கள் நடந்து கொண்டு உள்ளதை நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.
அவ்விடயம் சம்பந்தமான கருத்துக்கள் கூறப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது. மேலும் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது.
இந்த நாட்டில் இடம்பெறும் இராணுவ ஆட்சி,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, ஆசிரியர்களின் போராட்டம்,இவை அத்தனையும் ஒரு பிரச்சினையாக கூறப்பட்டுள்ளதே தவிர அரசாங்கம் அவற்றை எல்லாம் உடனடியாக செய்ய வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்கிற உத்தரவு குறித்த அறிக்கையில் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது.
கடந்த ஐ.நா.சபையின் அறிக்கை என்பது மிகவும் ஒரு முக்கியம் வாய்ந்த காத்திரமான அறிக்கையாக அமைந்திருந்தது.மக்களும் அதனை வரவேற்ற நிலையில் தற்போதைய ஆணையாளரின் அறிக்கை என்பது மிகவும் கவலை தரக்கூடிய விடயமாக அமைந்துள்ளது.
குறித்த அறிக்கையின் ஊடாக நாங்கள் எதிர்பார்க்கின்ற சர்வதேசம் என்கிற விடயம் கை விட்டு போய் விடுமோ? என்கின்ற கேள்வி எங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குறித்த அறிக்கையில் எமது பல பிரச்சினைகள் தொடர்பாக மேலோட்டமாக காட்டப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு நிலைப்பாட்டை இந்த அறிக்கை சொல்லவில்லை.அதனை விட இலங்கை அரசாங்கத்தை நம்புவதாகவும்,புதிதாக தெரிவு செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் நல்லதொரு மனிதர் என்கின்ற போர்வையில் அவரை புகழ்ந்து பேசுகின்ற ஒரு நிலையும் அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்குகின்றது போன்ற ஒரு நிலையும் காணப்படுகிறது.
இந்த ஜனாதிபதியும், அரசாங்கமும் இருக்கும் வரை தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.கால தாமதத்தை ஏற்படுத்துகின்ற வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
