கொழும்பில் உள்ள 150 வருடங்கள் பழைமையான கட்டடம் இடிந்து வீழ்ந்தது
புதிய இணைப்பு
கொழும்பு, கொம்பனித் தெரு பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் பழமைவாய்ந்த டி சொய்சா கட்டடம் நேற்றிரவு இடிந்து வீழ்ந்தது.
குறித்த கட்டடம் சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்தது எனவும், இடிந்து வீழ்வதற்கு முன்னர் சிறிது காலம் கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
1870களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட குறித்த கட்டடம் இடிந்து வீழ்ந்த விடயத்தை கொம்பனித்தெரு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கட்டடத்தை இடிக்க உரிமையாளர் முன்னதாக அனுமதி கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி தொல்பொருள் திணைக்களத்தினால் மறுக்கப்பட்டிருந்தது.
கட்டடத்தை பாதுகாக்கும் பணியைத் திணைக்களம் ஆரம்பித்திருந்தாலும் கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளதாக, தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் காவல்துறைக்கு முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"டி சொய்சா கட்டிடம் ஒரு பாரம்பரிய கட்டடம், இது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்" என அவர் குறிப்பிட்டுள்ளார். டாடா வீடமைப்பு மற்றும் காணி அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து குறித்த கட்டடத்தை இடிக்க கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் இதுபோன்ற பெறுமதியான கட்டமைப்பை இடிப்பது குறித்த கரிசனைகள் காரணமாக இந்த செயற்பாடு பெரும்பாலும் தாமதமானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொம்பனித்தெரு, மலே வீதியில் உள்ள பழைமையான கட்டடம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




