மட்டக்களப்பு வாகரை பகுதியில் பொலிஸாருக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அங்கு பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் ஒன்றுதிரண்ட காரணத்தினால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
கைது
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் உள்ள வயல் பகுதியில் உள்ள குழியொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரவு 8.30மணியளவில் அம்மந்தனாவெளி பகுதியில் பொலிஸார் இருவரை கைது செய்ய முற்பட்டபோது அதில் ஒருவர் தப்பியோடியதாகவும் தப்பியோடிய நபரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இளைஞன் தப்பியோடிய நிலையில் குழிக்குள் வீழ்ந்து இறந்திருக்கலாம் என பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் பிடிக்கப்பட்டு அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விசாரணை
இந்த நிலையில் குறித்த சம்பவம் பொலிஸாரினாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தினை நடாத்த முற்பட்ட நிலையில் அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த நீதிபதி மரண விசாரணையினை முன்னெடுத்ததுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பணித்துள்ளார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
