அதிக இலாபத்தைச் சம்பாதித்துள்ள இலங்கை வங்கிகள்
கடன் மீள் திருத்தத்தின் போது வங்கித் துறையை விடுவித்ததன் காரணமாக அவர்களுக்கு ஆசுவாசப்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் வங்கித் துறையினர் மிகப் பெரும் இலாபத்தினையும் உழைத்திருக்கின்றார்கள் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வங்கிகள் ஈட்டியுள்ள இலாபம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையில் வங்கித் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுடைய தனிப்பட்ட கருத்துக்களைப் பார்த்தால் கத்தி முனையில் நடந்து கொண்டிருக்கும் வேலையைத் தான் அவர்கள் தற்போது செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனாலும் கூட கடன் மீள் திருத்தத்தின் போது வங்கித் துறையை விடுவித்ததன் காரணமாக அவர்களுக்கு ஆசுவாசப்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இந்தக் காலப்பகுதியில் வங்கித் துறையினர் மிகப் பெரும் இலாபத்தினையும் உழைத்திருக்கின்றார்கள்.
ஏனென்றால் இந்த வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்ட போது அதிக வட்டிக்கு கடனை வழங்கி அதன் மூலமாக அதிக இலாபத்தை அவர்கள் உழைத்திருக்கின்றார்கள்.
ஆகவே இந்த நெருக்கடி காரணமாக வங்கித் துறையிலே இருந்த பல்வேறு வங்கிகள் மிகப் பெரிய இலாபத்தை உழைத்திருக்கின்றன.
ஆகவே அவை சத்தமில்லாமல் இருப்பதற்கு இந்த இலாபங்களும் ஒரு காரணமாக இருக்கின்றன. அவற்றை அவர்கள் மீள் முதலீடு செய்யவில்லை.
அரசாங்கத்தின் அறிவிப்பு
இப்போது மத்திய வங்கி, வட்டி வீதங்கள் குறைந்திருக்கின்றது. இன்னும் குறைக்க வேண்டும். நீங்கள் பொருளாதாரத்திற்கு கடன் வழங்க வேண்டும். அப்படியென்றால் தான் பொருளாதார நடவடிக்கைகள் விரிவாக்கம் அடையும் என்று சொல்கின்றது.
மேலும், அரசாங்கம் இப்போது இந்த வட்டி வீதங்களை மேலும் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஆனால், அதிக வட்டி வீதத்திற்கு கடன் வாங்கியவர்களுடைய நிலைமை மிக மோசமானதாக இருக்கின்றது.
அரசாங்கம் தொடர்ச்சியாக வட்டி வீதங்களை குறைத்துக் கொண்டு போனாலும் கூட வங்கித் துறையிடம் இருந்து கடன் வாங்கியவர்கள் இன்னும் மிக அதிகமான வட்டி வீதத்தைத் தான் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
வட்டி வீதங்கள் இப்போது மிகவும் குறைந்திருக்கின்றன. சாதாரண வட்டி வீதங்கள் 12 வீதம் என்ற அளவுக்கு குறைந்திருந்தாலும் கூட கடனட்டைகளுக்கான வட்டி வீதம் இன்னும் 30 சதவீதமாகவே இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |