குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்த விவகாரம்!நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்துமயானத்தில் புதைத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் மார்கழி மாதம் 14ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இனைப்புச்செயலாளர் யோ.ரொஸ்மன், இளைஞர் ஒருங்கினைப்பாளர் அனோஜன்,மாநகர சபை உறுப்பினர்களான செல்வி மனோகரன் மற்றும் அருள்தாஸ் சுசிகலா ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையானது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
குறித்த வழக்கு விசாரணையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொள்ளவில்லை. இதன்போது குறித்த வழக்கில் தொடர்புடைய மாநகர சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளீர் அணி தலைவியுமான செல்வி மனோகரன் அவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இவரது மரண சான்றிதழை எதிர்வரும் மார்கழி மாதம் 14ம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்றைய தினம் வழக்கிற்கு வருகை தராமைக்கான ஆவணங்களுடன், அடுத்த வழக்கு தவனை அன்று கட்டாயம் வருகை தருவதோடு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியான ஆசாத்தின் உடற்பாகத்தை கள்ளியன்காடு இந்து மயானத்தில் பொலிஸார் புதைத்தனர்.
இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பாக குறித்த வழக்கு
தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



