ஷானி அபேசேகர விடுவிக்கப்பட வேண்டும் - தலதா அத்துகோரள
குற்றப் புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மீது வழக்குத் தொடர ஆதாரங்கள் இல்லாமையால், அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று பல துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தபோதும், சட்டமா அதிபர் திணைக்களம் அதனை தன்னிச்சையாக மீறிவிட்டதாக முன்னாள் நீதி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரள குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,
இந்த விடயம் தொடர்பில் சட்டத் துறையில் உள்ள தனது நண்பர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டதாக அதுகோரள கூறியுள்ளார்.
அடிப்படை ஆதாரங்களை ஆராயாமல், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஷானி அபேயசேகரவையும் அவரது சகாக்களையும் முடிந்தவரை நீண்ட காலம் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்,
இருப்பினும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பல மூத்த அதிகாரிகள், அவர் மீது குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளதாக தலதா அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆகிய இரண்டும் கடந்த 11 மாதங்களாக குற்றச்சாட்டுக்கள் இன்றி, இவர்கள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டுள்ளதால், சுமார் 6000 முதல் 6500 பொருட்களுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிவிலக்கை இழக்கவேண்டியேற்படும்.
இந்த நாடு ஒரு சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத நாடு என்பதை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் ஆடைகளே தீர்மானிக்கின்றன என்று அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பிற நாடுகளை புறக்கணித்தால், மிக விரைவில் ஜி.எ.ஸ்.பி பிளஸ்ஸை இலங்கை இழந்துவிடும். 2015இற்கு பிறகு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே இந்த சலுகையை திரும்ப பெற்றது.
ஆனால் இப்போது அதை இழந்தால், இலங்கையின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்திக்கும். எனவே பழிவாங்கலில் ஈடுபடுவதற்காக, பொருளாதாரத்தை ஆபத்தில் தள்ள முடியாது.
இந்தநிலையில் ஷானி அபேசேகர மற்றும் பிற அனைத்து அரசியல் கைதிகளுக்கும் எதிரான வேட்டையை அரசாங்கம் நிறுத்தாவிட்டால், நிச்சயமாக மிகவும் தேவையான ஜி.எஸ்.பி பிளஸை நாடு இழந்து விடும்.
இதனால் ஆயிரக்கணக்கான ஆடைத் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்றும் தலதா அத்துகோரள எச்சரித்துள்ளார்.