அரளிமாளிகை வளாகத்தில் விழுந்து கிடந்த றக்பி வீரர் தாஜுதீன்! சிரந்தியால் மூடிமறைக்கப்பட்ட சம்பவம்
அரளி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த சம்பவத்தை விபத்தாக மாற்றுவதற்கு உதவி செய்தார் என்ற திடுக்கிடும் தகவலை புலனாய்வு ஆதரங்களை மேற்கோள் காட்டி இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் லண்டனில் அமைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அநுர சேனாநாயக்க என்ன சொன்னார்
2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க - மைத்திரிபால இருவருடைய நல்லாட்சியில் தாஜுதீனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு மேல் செல்வதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் இடம் கொடுக்கவில்லை.
அண்மையில் இந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதற்கமைய, மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த அநுர சேனநாயக்க, தாஜுதீன் வழக்கில் வெலிக்கடை சிறைச்சாலையின் சிறப்புச் செல்லில் இருந்தபோது அவர் கூறியதே இந்த சம்பவமாகும்.
அநுர சேனநாயக்க அன்று காலை உடற்பயிற்சிக்குச் செல்ல ஆயத்தமாக வெள்ளை நிற காற்சட்டையும் காலணியும் அணிந்திருந்த வேளையில் “சிரந்தி மேடம்” அழைப்பதாக பொலிஸ் காவலர் ஒருவர் கூறினார்.
அநுர சேனநாயக்க தொலைபேசியை எடுத்தபோது “அநுர நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? விரைவில் வீட்டிற்கு வாருங்கள் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என சிரந்தி ராஜபக்ச கூறினார்.

அநுர சேனநாயக்க அந்த ஆடையுடனேயே அரளி மாளிகைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்றபோது “ஒரு சம்பவம் நடந்துவிட்டது எமது பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்” என்று சிரந்தி கூறினார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது, ரக்பி வீரர் தாஜுதீன் படுகாயமடைந்து விழுந்து கிடந்தார். அநுர சேனநாயக்க தொட்டுப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
“சிரந்தி மேடம் இந்த பையன் இறந்துவிட்டான்” என்று கூறியதும் “ஏதாவது செய்யுங்கள் அநுர” எனக் கூறினார். உடனடியாக அநுர சேனநாயக்க மேலும் சிலருடன் பேசி உடலை நாரஹேன்பிட்டியில் விபத்து நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு கொண்டு சென்று காரின் சாரதி ஆசனத்திற்குப் பக்கத்தில் (இடது பக்க ஆசனத்தில்) வைத்து சம்பவத்தைச் சித்தரித்துள்ளனர்.
நல்லாட்சியில் தாஜுதீன் கடுமையாக தாக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்றும், விபத்தில் நடந்த மரணம் இல்லை என்றும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சி.ஐ.டி விசாரணை
நாரஹேன்பிட்டி போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான ஐ.பி. சுமித்த சில்வாவை அழைத்து அநுர சேனநாயக்க இந்த சம்பவத்தை ஒரு வாகன விபத்தாக மாற்றி, கார் தீப்பற்றி எரிந்த காரணத்தினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
2015-2016 காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபயசேகர நடத்தப்பட்ட விசாரணையில் சுமித்த சில்வா கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் அநுர சேனநாயக்கவின் வழிகாட்டலிலேயே தான் இதைச் செய்ததாக நீதிவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.
ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், ஷானி அபயசேகரவும் அவரது குழுவினரும் தன்னைப் பயமுறுத்தியதாலேயே அவ்வாறு கூறியதாக சுமித்த சில்வா மாறுப்பட்ட கருத்தை கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும்போதும் சுமித்த சில்வா எவ்வாறு அவுஸ்திரேலியாவிற்குச் சென்றார் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சட்ட மருத்துவ அதிகாரி ஜேம்ஸ் சமரகோன், அநுர சேனநாயக்க மற்றும் சம்பவ இடத்தை சுத்தம் செய்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும் தாஜுதீன் கொலைச் சம்பவத்தின் விசாரணைகள் இன்னும் முழுமை பெறவில்லை.
குறித்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புபட்டிருந்தவர்கள் மரணமடைந்துள்ள நிலையில் இப்போது வெளிவந்திருக்கும் தகவல்களின் படி மிகவும் பாரதூரமானதாக தோன்றுகிறது.
பொன்சேகாவை இராணுவத்தினர் கைது செய்த போது அதே ஹோட்டலில் தங்கியிருந்த அநுர! மேடையில் சம்பவத்தை விபரித்த ஜனாதிபதி