யாழில் பெரும் கலவரம்! பொலிஸாரால் தள்ளி விழுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி - வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது
update - 03.25
யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவருக்கும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
தையிட்டியில் - திஸ்ஸ விகாரைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, வேலன் சுவாமிகள், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்படி, ஒரு இலட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
புதிய இணைப்பு
யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் இருந்து கைது செய்யப்பட்ட ஐவரையும் மீட்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உள்ளிட்ட குழுவினர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
பலாலி பொலிஸ் நிலையத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள வேலன் சுவாமிகள், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் உள்ளிட்ட ஐவரையும் மீட்கும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு முன்பாக முகாமிட்டிருக்கும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து அகன்று செல்வார்களாயின் இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, போராட்டக்களத்தில் இருந்து சிலர் வெளியேறிச் சென்றுள்ளதாகவும், எனினும், கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த பின்னரே வெளியில் விடப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இதன்போது, வேலன் சுவாமிகள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
அமைதியின்மை...
இந்த நிலையில், போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸாரால் கீழே தள்ளி விழுத்தப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அத்துமீறி கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது.
குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெறப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டு, போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட வேளை, விகாரையை அண்மித்த சூழலில் பெருமளவான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன் அப்பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனால், திஸ்ஸ விகாரைக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டது.
எனினும், இது ஒரு அமைதிவழி போராட்டம், இங்கு எந்த விதத்திலும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவில்லை. விகாரைக்கு சேதம் விளைவிக்கவில்லை. விகாரைக்கு செல்லும் வீதியில் நீங்கள் எவ்வாறு அத்துமீறி மறித்து வைத்திருப்பீர்கள் என பொலிஸாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், வேலன் சுவாமிகள், வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனால் போராட்டக் களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில், போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam