தமிழர் பண்பாட்டின் சின்னமான தைப்பொங்கல்
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழும் நிகழ்வுகளில் பண்டிகைகள், சடங்குகள் என்பன முக்கியம் பெறுகின்றன. இவை காலம், இடம், சூழல், தேவை, நோக்கம் என்பவற்றினால் வேறுபடுகின்றன.
மனித வாழ்வு பண்பாட்டுக்குரியது என்பதால் உயிரியல் நிலையில் நிகழ்வுகள் பண்பாட்டு வயப்படுகின்றன. அந்தவகையில் தமிழர் சடங்குகள் சமூக, பொருளாதார, அரசியல், போரியல், சமய, தளங்களைச் சார்ந்தும் அமைகின்றன. அந்தவகையில் தமிழர் பண்பாட்டின் உயிர்ப்பிற்கு உறுதியாய் இன்றுவரை தொடரும் பண்டிகைகளில் தைப்பொங்கல் முக்கிய இடம் வகிக்கின்றது.
தமிழரின் வாழ்வியற் தடத்தில் இன, மத பேதங்களைக்கடந்து தமிழன் என்ற உறுதிப்பாட்டில் ஒற்றுமையடையச் செய்வது பொங்கலே. இப் பொங்கல் பண்டிகையானது இந்து, கிறிஸ்தவ,வேறு மதபேதங்களைக் கடந்து தமிழனின் பண்பாட்டியலின் உயிர்ப்பில் தைப்பொங்கல் உறுதியாகவே விளங்குகிறது. தமிழர்களின் வாசல்கள் தோறும் கோலம் போட்டு நிறைகுடம் வைத்து அந்த சூரிய தேவனுக்கு தன் நன்றிக் கடனினை செலுத்துகின்றார்கள்.
ஈழத்ததைப் பொறுத்தவரை 2009 இற்கு முன்னர் தமிழர் உயிர்ப்பின் உயிர் நாடியாக இப்பொங்கல் விளங்கியது தாம் ஆலயங்களில், வீடுகளில், பொது இடங்களில், களமுனை என பொங்கிச் சூரியனுக்கு தன் நன்றிக் கடனைச் செலுத்துகின்றனர். களமுனைகளில் போராளிகள் தங்களது ஆயுத தளபாடங்களை வைத்து சூரியனுக்கு பொங்கி நன்றிக் கடன் செலுத்துகின்றனர். ஈழத்தைப் பொறுத்தவரையில் ஈழத்தில் தமிழர் திருநாள் தனித்துவம் பெற்றது எனில் அது தமிழீழ விடுதலைப்புலிகளையே சாரும்.
மார்கழி மாத மழை இருளாலும், தை மாதப்பனியாலும் அல்லல்படும் மக்களுக்கு யானிருக்கிறேன் என நாற்றிசையும் தன் ஒளி பரப்பி கிளம்பும் சூரியனுக்கு நன்றிக் கடன் செய்கின்ற நாளாகவும் இது அமைகின்றது.
பொங்கலின் பின்னணி
தைப் பொங்கல் பண்டிகையின் பின்னணியை நோக்கில் நெல்லின் அறுவடை கண்ட மகிழ்ச்சியில் தம் உழைப்பிற்கு உதவி செய்து நின்ற அனைத்திற்கும் நன்றிக் கடன் செலுத்தும் ஆனந்த விழாவாகவே கொண்டாடப்படுகிறது.
இனி இந்தப் பொங்கல் பண்டிகை ஏன் தைமாதத்தில் மட்டும் கொண்டாடப்படுகின்றது என நோக்கில்
புவியின் காலநிலைத் தளத்தில் தென்னிந்தியாவும், ஈழமும் ஒரே புவியியல் சார் தன்மைகளுக்கு உட்படுவதால் இங்கே புரட்டாதி முதல் மார்கழி வரை மழைக் காலப் பகுதியாக விளங்குகின்றது. இதன்போது குளங்கள், நீர்நிலைகள் நிறைந்து பயிற் செய்கைக்கு ஏற்ற நீர்ப்பாசனத்தை வழங்குகின்றது. இதனால் விளைநிலங்கள் விளைச்சலுக்கு உள்ளாகி தை மாதத்தில் மழைகாலம் முடிவடைய தை மாத்தில் அறுவடை செய்கின்றார்கள். இது பொங்கல் நிகழ்விற்குப் பொருத்தமாக அமைகின்றது.
அத்துடன் தமிழுக்கு அறநூலான திருக்குறள் தந்தவர் திருவள்ளுவர். ஆதலினால் திருவள்ளுவரின் பெயரிலேயே தமிழர் ஆண்டும் ஆரம்பிக்கப்பட்டு திருவள்ளுவர் ஆண்டு தை மாதத்தை முதன்மையாகக் கொண்டு மார்கழி மாத்தில் முடிகின்றது. திருவள்ளுவர் காலம் கி.மு 31 என்கின்றனர். இதனாலே தான் எமது நாள் காட்டிகள் திருவள்ளுவர் ஆண்டு எனத் தொடங்குகின்றது. இது தொடங்குகின்ற நாளே தைப்பொங்கல் நாள். இதுவே தமிழனின் புத்தாண்டு தினம் என்கின்றனர் ஒரு பகுதியினர்.
வரலாற்றுக் காலங்களில் பொங்கல் தைத்திருநாளான பொங்கலினை பழந்தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றுக் காலங்களை சான்றாதாரம் படுத்துகின்றனர். சங்ககாலத்தில் பொங்கல் நாளை அறுவடை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடியிருக்கின்றனர். என்பதனை சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் 22ஆம் பாடல் விளக்கிறது.
“அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல….”
என்று குறந்தோழியூர் கிழார் எனும் புலவர் அறுவடை விழாவை சாறு கண்ட களம் என வருணிக்கின்றார்.
அத்துடன், சங்ககால நூல்கள் பலவும் தைத்திருநாளை சிறப்பாக எடுத்தியம்பியிருக்கின்றன.
‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ (நற்றிணை)
‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ (குறுந்தொகை)
‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ (புறநானூறு)
‘தைஇத் திங்கள் தண்கயம் போது’ (ஐங்குறுநூறு)
‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ (கலித்தொகை)
எனப்பலவாறாக தைத்திருநாளின் சிறப்பியல்புகளை பழந்தமிழர் இலக்கியங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றனர். இது தமிழர் திருநாளை பழந்தமிழன் எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடினான் என்பதனை எடுத்தியம்புகின்றன. மேலும் இந்தியா, ஈழம் ஆகிய நாடுகளை அடிமைப்படுத்தியிருந்த போத்துக்கீசர் பொங்கலின் சிறப்பினை தெளிவு படுத்தியிருக்கின்றனர்.
அதாவது கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு
வந்த அப்போடூபாய் எனும் போத்துக்கீச அறிஞர் தான் எழுதிய‘இந்துக்களின் பழக்க
வழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் எனும் நூலிலே பொங்கல் உழவர்களின் அறுவடை
நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
இனி இத்தனை சிறப்புக்கொண்ட தைப்பொங்கலை தமிழர் திருநாளாக மாற்ற வேண்டும். தைப்பொங்கல் நாளே தனிப்பெரும் பண்டிகை என 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் வாழ்ந்த பேராசிரியர் நமசிவாய முதலியார் அவர்களே முதன்முதலாக பறைசாற்றியவராவார். இவருக்கு தமிழ்பேசும் நல்லுலகு என்றென்றும் நன்றியுடையதாகின்றது. இவர் தமிழகத்தின் கடற்கரை மீன்பிடிக்கிராமங்களில் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வழிவகுத்தவராவார்.
தமிழக ஈழப்பண்பாட்டுப் பரவலிடையே தமிழகப் பண்பாட்டு மரபுகள் ஈழத்தில் பரவியிருந்த போதும் சில அம்சங்கள் இச்சமூக குழுமங்களுக்கு ஏற்றவாறு வடிவம் பெற்றும் மாற்றமடைந்தும் காணப்படுகின்றன. தமிழகத்தில் நிலவும் சில வழமைகள் எமது ஈழப் பகுதியில் காணமுடிவதில்லை. ஈழத்தில் தைப்பொங்கல் என்னும் சொல் ஒரு தனித்துவ வழக்காறாக உள்ளது.
ஆனால் தமிழகத்தில் தைப்பொங்கலின் முதன்நாள் போகிப்பண்டிகை என்ற பெயரில் பழைய பொருட்களை தீயிட்டுக் கொழுத்தி, பீடைகளை அகற்றி கொண்டாடுகின்றார்கள். இந்நிகழ்வு ஈழத்தில் இல்லை என்றே கூறலாம். இருந்தாலும் ஈழத்தில் பொங்கலுக்கு முதல் பழைய பொருட்களை அகற்றி வீட்டை சுத்தம் செய்தல் முதலானவை நடைபெறுகின்றதன.
மாட்டுப்பொங்கல்
பொங்கலிற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல். அன்று உழவர் தொழிலுக்கு முக்கியமாகக் கருதப்படும் மாடுகளை நீராட்டி அலங்கரித்து வழிபடல் இந்நிகழ்வின் மரபு.
உழவனே உலகிற்கு உயிர் கொடுப்பவன் அவன் இன்றேல் அவனியே இல்லை எனச் சொல்வார்கள். இதை கம்பன்கூட தனது ஏரெழுபது என்னும் நூலில்
‘மேழிபிடிக்கும் கைவேல் வேந்தர்க்கு நோக்குங் கை ’ என்று பாடுகிறான்.
‘ஏன் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்று வள்ளுவனும்
‘வரப்புயர நீருயரும்’ என்று ஒளவையும்,
""உழவுத் தொழிலுக்கும் வந்தணை செய்வோம்"" என பாரதியாரும் போற்றியிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட சிறப்புக்கள் மிக்க உழவர் திருநாளாகிய மாட்டுப்பொங்கல் சமூக மாற்றத்தின் நடுவே வெறும் சடங்காக மட்டுமே இந்நிகழ்வு நடாத்தப்படுகின்றது. இது காலமாற்றத்தின் தன்மையே.
அத்துடன் தமிழர் பண்பாட்டின் வெளிப்பாடாய் மட்டுமன்றி தமிழர் பண்பாட்டின் விழுமியங்களை நிலை பெறச் செய்யவும் தமிழகத்தில் பொங்கலன்று நிகழும் ஜல்லிக்கட்டு நிகழ்வு முக்கிய இடம் பெறுகிறது.
இது சங்ககாலத்தில் நடைபெற்ற காளையை அடக்கும் ஏறு தழுவுதலின் தொடர்ச்சியாகவே நடைபெறுகின்றது. இது சங்ககாலத்தில் நடைபெற்ற ஏறதழுவுதலின் பண்பாட்டினைக் கொண்டிருக்காவிட்டாலும் தமிழர் பண்பாட்டினை தொடர்ந்தும் உயிர் பெறச் செய்கின்றது.
ஆனால் இது ஈழத்தில் வண்டிற் சவாரிகளாக நடைபெறுகின்றன. வன்னியில் உருத்திரபுரம், வட்டக்கச்சி, விசுவமடு, வவுனிக்குளம் ஆகிய விளையாட்டு மைதானங்கள் இந்நாளில் களைகட்டும். நன்றாகச் சவாரி செய்யக்கூடிய மாடுகளை பந்தையப்படுத்தி வண்டியிற் பூட்டி சவாரி செய்வார்கள். இது கால மாற்றத்திற்கு ஏற்ப தமிழர் பண்பாடு ஈழத்தில் நடைபெறுவதனைக் காட்டுகின்றது.
கணுப்பொங்கல்.
இது பொங்கலின் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடைபெறும் கணுப்பண்டிகை. ஈழத்தில் இல்லை. இது பெண்களுக்கான விஷேசமான தினமாகும்.
பொங்கற் பானையில் கட்டிய மஞ்சளினை எடுத்து பெரியவர்களிடம் கொடுத்து நெற்றி மற்றும் தாலியில் மூன்று தடவை ஒற்றிக்கொள்வர். பெரியவர்கள் இல்லாவிடத்தில் கணவனிடம் கொடுத்து ஒற்றிக்கொள்வர். இதன்போது பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதணம் என்று அனுப்புவதும் இந்நாளில் வழமையானது. பிறந்தவீடு செழிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இப்பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இது சங்ககாலத்தில் தை நீராடல் என அழைக்கப்பட்டது.
ஈழத்தமிழர்களிடையே போகிப்பண்டிகை, கணுப்பண்டிகை ஆகியன இல்லை. காரணம் ஈழத்தில் ஒரு தனித்துவமான ஆரியக் கலப்புக்கள் பெரிதும் இல்லாத ஒரு இனக்குழுமம் வாழ்ந்தமையைச் சொல்லலாம். இருந்தபோதும் மாட்டுப் பொங்கலின் மறுநாள் ஈழத்தில் சில இடங்களில் அசைவ உணவுசமைத்து உறவினர்களுடன் உண்டு மகிழ்கின்ற நிகழ்வு நடைபெறுகின்றது.
இது பெயரின்றி நடைபெறும் பண்பாடாகவே பார்க்கலாம். இதனால் ஆரியப் பிராமணியங்களின் கலாச்சாரச் சடங்குகளான இவையிரண்டும் ஈழத்தில் பெயரளவில் இல்லை ஆனால் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் என்பன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் காலங்காலமான நம்பிக்கை. இதனால் தான் இது தமிழர்களின் மத்தியில் ஒரு உறுதியை புத்துணர்ச்சியை வளர்க்கும். போரின் விளைவால் புலம்பெயர்ந்து சிதறிச் சிக்கல் தன்மை வாய்ந்து அலைகின்ற சமூகமாக ஈழத்தமிழ்ச் சமூகம் இருந்தாலும் தாம் வாழும் இடங்களில் , தம்மிடையே நீளும் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் தைப்பொங்கற் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
காலங்காலமாக, கூட்டாய், ஒற்றுமையாய் கொண்டாடிய பொங்கல் இன்று உறவுகளைப் பறிகொடுத்து, அங்கத்தவர்கள் இல்லா பொங்கலாய், முற்றங்கள் இல்லாத பொங்கலாய், வாழ்வின் ஆதாரமான உழைப்புக்களை, வருமானத்தினை எட்டமுடியாத பொங்கலாய், தமது தேசங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாது பிறர் முற்றங்களில் பொங்கும் பொங்கலாய், பலர் வாய்விட்டு தமது சோகங்களை சொல்லத் தயங்கும் பொங்கலாக கடந்த 2009 இற்கு பின் வருகின்ற பொங்கல் இடம்பெறுகின்றது. இது தமிழர் பண்பாட்டில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.
அத்தோடு புலம்பெயர் வாழ்வில் மக்களிடையே பொங்கல் அவ்வவ் நாடுகளிகளின் தன்மைகளுக்கு ஏற்ப வீட்டிற்குள்ளே அமைகின்றது. பெரும்பாலான மக்கள் ஆலயங்களுக்குச் சென்று தம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள். அத்துடன் ஈழத்தில் கூட முற்றத்தில் கோலமிட்டு பொங்குகின்ற நிகழ்வும் தொடர் மாடிக்கட்டங்களில் வசிப்போரிடம் இல்லை எனலாம்.
தைப்பொங்கலை தமிழ்ப்பாரம்பரிய தினமாக பழந்தமிழன் கொண்டாடினான். எனவே தமிழரின் சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் தமிழர் பண்பாட்டினது உயிர்ப்பின் உறுதியாய் பொங்கல் நிகழ்வு அமைகிறது.
கட்டுரை : அ.மயூரன், M.A.
May you Like this Video

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
